திருக்கைலையில் சிவபெருமான் சிங்காசனத்தில் எழுந்தருளியுள்ளார். அப்போது பார்வதிதேவி அருகில் வந்து இறைவா தாங்கள் உருவமற்றவர் என்றும் பல உருவங்களை கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. எங்கும் நிறைந்துள்ள உங்களுடைய உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் யாம் பிரம்மமாக இருக்கும் போது எனக்கு உருவம் இல்லை. உலகில் உள்ள உயிர்களுக்கு அருள் புரிவதற்காக நான் பலவகையான உருவங்களை எடுக்கிறேன். இவை அனைத்தும் அருள் வடிவங்கள் ஆகும். இந்த உலகத்தில் உருவம் அருவம் அருஉருவத்துடன் இருப்போம். நானே உன்னிலும் அனைவரிடத்திலும் இயக்க சக்தியாக இருக்கிறோம். நானில்லையெனில் அனைவரும் இயக்க சக்தியில்லாமல் சதைப்பிண்டம் என்றார். இதனைக் கேட்ட பார்வதிதேவி இயக்க சக்தியாக இருப்பது நான்தானே என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதனைக் கேட்ட சிவபெருமான் எனது சக்தி என்று பெருமையாக சொல்கிறாயா? என்று பிரம்மாவிடம் இருந்தும் திருமாலிடம் இருந்தும் தமது சக்தியை நிறுத்தினார். இதனால் பிரம்மாவாலும் திருமாலாலும் தனது தொழிலை செய்ய முடியவில்லை. உலகம் செயலிழந்தது. உலகம் செயலிழந்ததை கண்ட பார்வதிதேவி நான் விளையாட்டாக சொன்னேன். நீங்கள் அதை உண்மையாக எடுத்துக் கொண்டீர்கள் என்னை மன்னியுங்கள். உலகம் முன்பு போல இயங்கச் செய்யுங்கள் என்றார். அதற்கு சிவபெருமான் நானே இயக்க சக்தி என்ற எண்ணம் உனக்குள் தோன்றியதால் அதற்கு தண்டனையாக உலகத்தில் பிறப்பெடுத்து அங்கே தவம் செய்வாயாக என்றார்.
சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப பார்வதி தேவியார் பூமியில் குழந்தையாக யமுனை நதிக்கரையோரத்தில் அவதரித்தார். தட்சன் அவருளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு தன் மகளாகக் கருதி வளர்த்தார். தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் சிவனைக் குறித்து தவமியற்றினார். இவ்வாறு பணிரெண்டாண்டு காலம் கடுமையான தவம் மேற்கொண்டார். அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேதியராக வேடமிட்டு தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாக சொன்னார். பார்வதிதேவியும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். பின்னர் சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி பார்வதி தேவியின் மாயையை விலக்கினார். மாயை விலகிய பார்வதிதேவி சிவபெருமானின் உண்மையை அறிந்து கொண்டாள். உடனே சிவபெருமான் தன்னை மறைத்துக் கொண்டார். பார்வதிதேவி எப்போதும் போல் தவச்சாலையில் தவம் செய்து காலம் கழித்தார். அவருடைய தவமானது முற்றுப் பெற்றதும் சிவபெருமான் இடபாருடராக வந்து தாட்சாயிணியை திருக்கயிலை அழைத்துச் சென்றார். இவ்வாறு திருமணம் செய்த பார்வதிதேவியை விட்டு மறைந்து பின் மீண்டும் வந்து கயிலைக்கு அழைத்தச் சென்ற மூர்த்தயே கௌரி லீலா சமன்விதமூர்த்தி ஆவார்.