பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குறைளை கேட்கவும் ஆலோசனைக் கூறவும் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேச வியாசமுனிவர் பாண்டவர்கள் இருந்த காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கே பலவகையில் இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறினார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது அறிவுரைப்படி குறிப்பிட்ட நல்ல நாளில் தவம் செய்ய அர்ஜூனன் இமய மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர் ரிஷிகள் தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான். அர்ஜூனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ஜூனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.
அர்ஜூனனின் தவப் பலனால் சிவபெருமான் வேடராகவும் பார்வதி தேவி வேடுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும் வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும் தேவகணங்கள் வேடுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ஜூனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக் கண்ட சிவபெருமான் பன்றி மீது அம்பு ஏய்து அசுரனை கொன்றார். அப்போது தவம் கலைந்த அர்ஜூனன் வேடுவக் கோலத்தில் இருந்த இறைவனை பார்த்ததும் தன்னை எதிர்க்க வந்திருக்கிறார் என்று எண்ணி சிவனுடன் யுத்தம் புரிந்தான். பின் அர்ஜூனனுக்கு சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். இறைவனிடம் யுத்தம் புரிந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை சரணடைந்த அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தை சிவனிடமிருந்து பெற்றான். அர்ஜூனனுடன் அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுக்க வந்த இறைவன் ஏற்ற வேடுவ வடிவமே கிராத மூர்த்தியாகும்.
குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் கோயிலி வில்வாரண்யேஸ்வரர் என்ற பெயரில் கிராத மூர்த்தி அருள்பாலிக்கிறார். கேரளாவில் அமைந்துள்ள வேட்டைக்கொருமகன் ஆலயங்கள் வேடுவக் கோலத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட கோயில்களாகும்.