தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். நடுவில் ஆலகால விஷம் வந்தது. அந்த விஷமானது உலகத்தை அழித்து விடும் என்பதால் அனைவரும் பின்வாங்கி பயந்து ஓடினார்கள். அனைவரும் சிவனை பிரார்த்தனை செய்ய சிவபெருமான் உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்து அவரது கழுத்திற்கு கீழே விஷம் இறங்காதவாறு கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் கழுத்தில் நின்ற விஷமானது சிவபெருமானின் கழுத்தை நீல நிறமாக்கியது. கண்டம் என்றால் கழுத்து என்று பொருள். உலகத்தை காக்க ஆலகால விஷத்தை அருந்தி நீலநிற கழுத்தை பெற்றதால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றார். தொடர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பெற்றவர்கள் திருமாலின் மோகினி அவதாரத்தால் தேவர்கள் மட்டும் அருந்தி வலிமை பெற்று அசுரர்களை தோற்கடித்து தங்களுக்கு உண்டான பதவியை மீண்டும் பெற்றார்கள்.
சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்தி அனைவரையும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி (நீலகண்டர்) என்ற பெயர் ஏற்பட்டது. வாமன புராணம் பிரம்மாண்ட புராணம் பாகவதம் ஆகிய நூல்கள் சிவபெருமான் நஞ்சுண்ட வரலாற்றை சிறப்பாக கூறுகின்றன. சங்க இலக்கியங்களிலும் இந்த வரலாறு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வடிவினை பற்றி பெரியாழ்வார் திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள். கம்பர் தனது காவியமான இராமாயணத்தில் நீலகண்ட திருமேனி என்று குறிப்பிட்டுள்ளார்.
நீலகண்டர் மூன்று கண்களுடன் சடாமகுடம் தரித்து இருப்பார். கரங்களில் மானும் மழுவும் இருக்கும். ஒரு கரத்தில் ஆலகால விஷமுள்ள கிண்ணமும் மறுகரத்தில் அருளால் குறியீடும் இருக்கும். உடலெங்கும் அழகான அணிகலன்களை அணிந்திருப்பார். நீலகண்டரின் இடப்புறத்தில் உமையம்மையார் அவரின் கழுத்தில் நஞ்சு இறங்காதவாறு பிடித்திருப்பார். நீலகண்டரின் இன்னொரு தோற்றம் பற்றியும் சில நூல்கள் கூறுகின்றன. இத்திருவடிவத்தில் இடப வாகனத்தில் சிவபெருமான் மிக்க கோபம் கொண்டவராகவும் கோரைப்பற்கள் உடையவராகும் அழகிய ஆபரணங்களையும் அணிந்தவராகவும் காணப்படுகிறார். வலது கையில் சூலமும் ஆலகால விஷம் இருக்கும். இடது புறத்தில் உள்ள கையில் கபாலம் இருக்கும். அவரின் அருகில் பார்வதிதேவி விற்றிருப்பாள்.
சென்னை ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளி கோயிலில் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்ட கோலத்தில் படுத்திருக்கிறார். அவரை சுற்றி தேவர்கள் அனைவரும் நிற்பதை காணலாம். திருநீலகண்டரது சிற்பங்களையும் ஓவியங்களையும் தமிழ்நாட்டில் உள்ள பல சிவாலயங்களில் காணலாம். சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் நீலகண்டரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. கழுகுமலை வெட்டியான் கோவில் விமானத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூணிலும் திருவுருவம் உள்ளது.