சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று திருமால் தனது வாகனமான கருடன் மீதேறி சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் சிவபெருமானை காண சென்றார். கருடன் வெளியே காத்திருந்தார். திருமால் சிவபெருமானை தரிசிக்க சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராததால் கருடன் உள்ளே செல்ல முயன்றது. அதற்கு நந்திதேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்திதேவரை தாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட நந்திதேவர் விட்ட மூச்சுக் காற்று கருடனை தாக்கியது. அந்த காற்றறின் வேகமானது கருடனை மிக தூரத்திற்கு தூக்கிச் சென்று போட்டது. நந்தி தேவர் மீண்டும் மூச்சை இழுத்ததும் காற்றின் வேகத்தில் உறிஞ்சப்பட்ட கருடன் மீண்டும் தான் இருந்த இடத்திலேயே வந்து விழுந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலைத் தடுமாறியது. மீண்டும் மீண்டும் நந்தி தேவரின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருந்தது கருடன். இதிலிருந்து திருமால் தான் தன்னைக் காக்க வேண்டும் என்று எண்ணி அவரை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. கருடனின் பிரார்த்தனை திருமாலின் காதில் விழ அவர் சிவபெருமானிடம் வேண்டினார். கருடனை மன்னித்த சிவபெருமான் நந்திதேவரை அழைத்து கருடனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவபெருமானின் கட்டளைக்கு ஏற்ப கருடனை விடுவித்தார் நந்தி. கருடன் தன் கர்வம் அடங்கி பின் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்கு உதவியதால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றை பதினோராவது திருமுறை சிறப்பாக கூறுகிறது.