சிவ வடிவம் – 24 ஜ்வாரபக்ன மூர்த்தி

மாகபலி மன்னனுக்கு வாணாசுரன் எனும் மகன் இருந்தான். இவன் ஆயிரம் கைகளைக் கொண்டவன். இவனது மனைவி சுப்ரதீகை. இவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கத்தை அமைத்து அதற்கு தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வந்தான். சிவபெருமான் இவனுக்குக் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இவன் உலகம் முழுவதையும் நானே அரசாட்சி செய்ய வேண்டும். நான் இருக்கும் சோணிதபுரத்தை சுற்றி என் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாதபடி நெருப்பினால் ஆன மதில் சுவர் அமைய வேண்டும். அழிவே இல்லாத நிலை வேண்டும் என்று கேட்டான். அதன்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் வரத்தை அருளிக் கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் வெற்றி பெற்று ஆட்சி செய்தான். மீண்டும் சிவபெருமானை தரிசித்து வரத்தைப் பெற விரும்பி வெள்ளி மலையை அடைந்தான். அங்கு தனது ஆயிரம் கைகளிலும் குடமுழா வாத்தியக் கருவியை வாசித்து தவம் செய்தான். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்திற்கு வந்து வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான். அவனின் தவப்பலனால் சிவபெருமான் குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே வசித்தார். இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு இழுத்து தோற்கடித்ததால் அனைவரும் ஓடி மறைந்து வாழ்ந்தார்கள். போர் செய்ய ஆட்களை தேடினான். யாரும் இல்லாமல் இறுதியில் தன்னுடன் போர் புரியும் படி சிவபெருமானை அழைத்தான்.

சிவபெருமானோ தனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டான். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள். அந்த செய்தி உனக்குக் கிடைக்கும் போது வருவான் என்றார். வாணாசுரனின் மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர் புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமானை கண்டான். சிவபெருமான் கண்ணனை சண்டைக்கு அழைத்தார். கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் கண்ணனைத் தேற்றி வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய். அதற்கு முன் எண்ணிடம் போர் புரிந்து பயிற்சி செய்வாயாக என்றார். இருவருக்கும் பல காலங்கள் போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க போர் நின்றது. பின் கண்ணனுக்கும் வாணாசுரனுடன் பயங்கரப் போர் நடைபெற்றது. அவனது கரங்கள் ஒவ்வொன்றாக கண்ணன் துண்டித்தான். சிவபெருமானை தொழுத கைகளை மட்டும் வெட்டாமல் கண்ணன் விட்டார். மனம் மாறிய வாணாசுரன் இறைவனிடம் மன்னிப்பு வேண்ட மன்னிக்கப்பட்டு மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. சிவபெருமான் இருப்பிடத்தில் குடமுழா வாத்தியக் கருவியை வாசிக்க பணி அமர்த்தப்பட்டான். அவனது மகள் உஷைக்கும் கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணனுடன் போர் புரிய சிவபெருமான் எடுத்த உருவமே ஜ்வாரபக்ன மூர்த்தியாகும்.

ஜ்வராபக்ன மூர்த்தியை நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டிய குடியில் உள்ள கோயிலில் காணலாம். இறைவியின் பெயர் வேதநாயகி ஆகும்.

சிவ வடிவம் – 23. கஜயுக்தமூர்த்தி

கஜாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவத்துடன் இருப்பவன். அவன் மேருமலையின் மேல் பிரம்மாவை நினைத்து கடும் தவம் செய்தான். தவத்தின் பலனாக பிரம்மா தோன்றினார். கஜாசுரன் யாராலும் தன்னை அழிக்க முடியாத வரமும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். சிவனை தவிர வேறு யாராலும் உனக்கு அழிவு இல்லை என்றும் வெற்றி கிடைக்கவும் பிரம்மா வரத்தைக் கொடுத்தார். வரம் கிடைத்ததும் அவன் தனது குணத்தைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானைத் தவிர அனைவருக்கும் தொல்லைகளையும் கொடுமைகளையும் செய்யத் தொடர்ந்தான். இந்திர லோகத்தின் தலை நகரான அமராவதியை நோக்கி சென்றான். எதிர்த்த இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான ஐராவம் யானையின் வாலைப் பிடித்து இழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். தேவர்களையும் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தி விரட்டினான். அவனைக் கண்டு பயந்த அனைவரும் காசியில் வீற்றிருந்த சிவபெருமானிடம் சென்றார்கள். பிரம்மாவிடம் அழியாத வரம் வாங்கிய கஜாசுரன் இங்கு வந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சிவபெருமானிடம் சரணடைந்தார்கள். மக்களின் பின்னாலேயே வந்த கஜாசுரன் சிவபெருமானை தான் எதிர்க்கக் கூடாதது என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலய வாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடுரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்ற சிவபெருமான் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

சிவபெருமான் கஜாசுரனை தனது திருவடியால் உதைக்க அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். சிவனது உக்கிரத்தை கண்டு அனைவரும் நடுங்கியபடி இருந்தார்கள். கஜாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சிவபெருமான் சாந்தமடைந்தார். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயர். இவருக்கு யானை உரித்த பெருமான் என்ற பெயரும் உள்ளது.

தாரகாபுரத்து முனிவர்கள் பிட்சாடனராக வந்த சிவபெருமானை அழிக்க யாகம் செய்து தங்களது மந்திர சக்தியைக் கொண்டு யாகத்தில் வந்த யானையால் சிவனானை அழிக்க ஏவினார்கள். சிவபெருமான் யானையின் உடலில் புகுந்து யானையின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார். அவரை கஜசம்கார மூர்த்தி என்றும் அழைப்போம்.

புராண சிவன் கோயில்கள் பலவற்றில் கோபுரத்திலும் தூண்களிலும் சுதை சிற்பமாகவும் இந்த கஜயுக்த மூர்த்தியின் சிற்பமும் கஜசம்கார மூர்த்தி சிற்பமும் உள்ளது.

சிவ வடிவம் 22. அர்த்தநாரீஸ்வரமூர்த்தி

அர்த்தம் என்பது பாதி நாரி என்பது பெண். சிவன் ஆண் உருவம் பாதி வலப்பக்கமும் சக்தி பெண்ணுருவம் பாதி இடப்பக்கமும் உள்ள உருவமே அர்த்த நாரீஸ்வரர் ஆகும். இது சிவனின்றி சக்தி இல்லை சக்தியின்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும்.

திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க திருமால் நான்முகன் இந்திரன் என அனைத்தும் தேவர் உலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும் சிவபெருமானையும் வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கியபடி சென்றார். பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இதனை கவனித்த பார்வதிதேவி அவரது உடலிலுள்ள சதையை தனது மூச்சுக் காற்றால் இழுத்துக் கொண்டார். ஆனாலும் பிருங்கி முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார். இதைக் கண்ட சக்தி சிவனிடம் நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று முறையிட்டாள். சிவபெருமானும் தனது சரிபாதி இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். இருவரும் அம்மையப்பனாய் நின்றார்கள்.

பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளி முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார். சிவசக்தி இருவரும் சரிபாதியாக அர்த்தநாரீஸ்வரராக நின்று பிருங்கி முனிவருக்கு அருள் புரிந்தார்கள்.

ஈரோடு அருகேயுள்ள திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவரராக அமர்ந்துள்ளார். இறைவி பெயர் பாகம்பிரியாள். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி பாகம்பிரியாள் என்று பெயர். இங்கு அர்த்தநாரீசுவரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி தேவார பாடல்களில் புராண நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ வடிவம் – 21. கல்யாணசுந்தரமூர்த்தி

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருக்கைலையில் அனைத்து தேவர்களுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைவன் முன் சென்றார். தட்சன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக உனது பெயர் மாறும். நீ பெரியவளானதும் நான் வந்து உன்னை மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார் பார்வதிதேவி. அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர்.

பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி மணப்பருவம் வந்ததும் சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். சிவபெருமான் பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை திருமணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து திருமணம் புரிவேன் என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்த ரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் திருமண நாளாக குறிக்கப்பட்டது. தேவர் உலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வட திசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அகத்தியர் திருமண கோலத்தை காண முடியாதே என்று எண்ணி தயங்கினார். இதனை அறிந்த சிவபெருமான் நீ விரும்பும் போதேல்லாம் உமக்கு எம் திருமணக் கோலத்தை காட்டுவோம். எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறே சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்ய எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.

திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையில் கல்யாணசுந்தரமூர்த்தி உள்ளார். இங்கு மூலவர் பெயர் விழியழகர் இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை ஆகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் பார்வதியின் திருமணக்கோலம் உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள கோயிலிலும் கல்யாணசுந்தரர் அருள்பாலிக்கிறார். மேலும் பல புராண கோயில்களில் மூலவருக்கு பின்புறம் சுதை சிற்பமாக கல்யாண சுந்தரமூர்த்தி திருமணக்கோலத்தில் உள்ளார்.

சிவ வடிவம் – 20. திரிபுராந்தகமூர்த்தி

பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரி புரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம் திரிபுராந்தகமூர்த்தி (திரிபுர அந்தக மூர்த்தி) ஆகும்.

தாரகாசுரனின் மூன்று மகன்களும் பிரம்மாவை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். அவர்களின் தவத்தின் பயனாக பிரம்மா அவர்களுக்கு காட்சிக் கொடுத்தார். பிரம்மாவிடம் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்று கேட்டார்கள். பிரம்மா அது முடியாத காரியம். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே. மற்ற அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும் என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன் வெள்ளி இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த முப்புரம் எங்களையும் சிவபெருமான் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாதபடி வரத்தை கேட்டனர். பிரம்மாவும் அவர்கள் கேட்டமடி கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் அசுரத் தன்மையை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினார்கள். அவர்களது தொல்லை தாளாத தேவர்கள் சிவனை நோக்கி கடுமையான தவத்தை செய்தார்கள். அவர்களின் தவத்தின் பயனால் சிவபெருமான் போர் செய்வதற்கு தேர் முதலான போர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே போர் கருவிகள் தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும் சந்திர சூரியர் சக்கரமாகவும் நதிகள் தேர்க் கொடியாகவும் அஷ்ட பர்வதங்கள் தேரின் தூண்களாகவும் புண்ணிய நதிகள் சாமரம் வீசவும் தேவ கணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடப வாகனத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளான வினாயகரை வேண்ட தேர் பழைய படி சரியானது. பின் தேவ கணங்கள் படை சூழ முப்புரம் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அப்போது தேவர்கள் தாங்கள் செய்த தேரினால் தான் சிவபெருமான் இந்த யுத்தத்தில் வெற்றி பெருவார். நாம் இல்லாமல் இவரால் வெற்றி பெற முடியாது என்ற கர்வம் கொண்டார்கள். இதனை அறிந்த சிவபெருமான் யுத்த கருவிகளை கீழே வைத்துவிட்டு முப்புரங்களைபயும் பார்த்து சிரித்தார். உடனே முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. உடனே தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் மூவரும் சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்டு சரணடைந்தார்கள். அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர் துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபுராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது.

கடலூரில் உள்ள திருஅதிகையில் திரிபுராந்தக மூர்த்தி உள்ளார். இவருக்கு அதிகைநாதர் என்ற பெயரும் உள்ளது. இறைவியின் பெயர் திரிபுரசுந்தரியாகும். கூவம் திரிபுராந்தகர் கோயிலில் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. மாமல்லபுர சிற்பத்தில் வடக்குச் சுவர் மற்றும் கொடித் தூணிலும் காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பத்திலும் சோழர் கால கோயில்களின் தேவகோட்டங்களிலும் நாயக்கர் கால தூண்களிலும் தஞ்சைக் கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பமாகவும் சிதம்பரம் கோயில் கலைக் கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலத்திலும் கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சியையும் திரிபுராந்தக மூர்த்தியைக் காணலாம். திருநல்லம் கோணேரிராஜபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத் திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.

சிவ வடிவம் – 19. கங்கா விசர்ஜன மூர்த்தி

ஆதி காலத்தில் அயோத்தியை இசுவாகு குலத்தில் சகரர் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொண்டு வந்தான். இந்த யாகத்தை மன்னன் செய்து முடித்தால் அவன் இந்திர பதவிக்கு தகுதி பெற்று விடுவான். இதனால் தற்போது இந்திரன் பதவியில் இருக்கும் இந்திரன் இந்த யாகத்தை தடுத்து நிறுத்த எண்ணினான். குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் என்று யாகத்தைத் தடுக்க குதிரையை பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டான்.

அயோத்தி அரசன் சகரர் குதிரையைத் தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மகன்களுக்கு கட்டளையிட்டார். பாதாளத்தில் கபில முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள் முனிவர் தான் குதிரையை திருடியவர் என எண்ணி அவரை திட்ட துவங்கினார்கள். தியானத்தில் இருந்து கண் விழித்த கபில முனிவர் அறுபதினாயிரம் பேரை பார்த்ததும் அவரது தவ சக்தியால் அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அனைத்தையும் அறிந்த சகரர் அரசன் கபில முனிவரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் சாம்பலான பிள்ளைகளுக்கு விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபில முனிவர் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தார். மேலும் மேலுலகத்தில் சிவனின் ஒற்றை திருமுடியில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் அஞ்சமான் நாட்டின் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.

அஞ்சுமானின் வம்சாவளியிலே வந்தவன் பகீரதன் ஆவான். பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக் கொண்டதும் தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்து கொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார். பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்து விட்டனர். பகீரதன் மகாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் சிவன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன். மனம் மகிழ்ந்த சிவனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது நான் பூமியில் நின்று எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் சிவனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டபடி பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். சிவன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த சிவனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல சிவன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக் கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் சிவனை நோக்கி மீண்டும் ஒற்றைக் காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய சிவன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு மனமிரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக் கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. தனது ஒற்றை திருமுடியில் இருந்த கங்கையை தனது சடையில் ஏற்று உலகத்திற்கு கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனி மழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடபாகம் பெற்ற தலம் கோதார்நாத் ஆகும்.

சிவ வடிவம் – 18. கங்காதரமூர்த்தி

சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது

திருக்கைலையில் பார்வதி தேவி சிவபெருமானின் இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கண்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப் பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும் அழிவையும் உண்டாக்க முன்னேறியது. இதனைக் கண்ட மூன்று உலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் திருமுடியில் தரித்தார். அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன் இந்திரன் திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று இறைவா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது. அதை உங்கள் திருமுடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும் நான்முகன் தனது மனோவதி நகருக்கும் திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர். பிற்காலத்தில் பகிரதன் தன் தவத்தினால் இந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.

கங்கை வெள்ளத்தின் வேகத்தை குறைத்து தனது சடைமுடியின் ஒர் திருமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு செல்ல இயலாதவர்கள் இருந்த இடத்திலேயே கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி வழிபடலாம்.

சிவ வடிவம் – 17. சண்ட தாண்டவ மூர்த்தி

திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தனக்கு தாண்டவ நடத்தை இறைவன் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள கார்கோடகன் பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்ட தாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார். திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன் நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

பார்வதியும் சப்தமாதர்கள் சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன். அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாறிவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகி அவனை அழித்தாள். போர் நல்லபடியாக முடிந்தது. அசுரனின் மாமிசத்தையும் இரத்தத்தையும் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார். இதனை அறிந்த சிவபெருமான் பைரவராக மாறி காளிதேவியிடம் போர் புரிந்தார். காளி தேவி தோற்று விட்டார். காளி தேவி தோற்றதும் நடனப் போர் புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். நவரசங்கள் ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர். இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின் குண்டலம் கீழே விழ அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார். போட்டி நடனம் ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். சுனந்தர் கார்கோடகன் உட்பட அனைத்து தேவர் முனிவர்களுக்கும் எல்லாக் காலமும் காணும்படி தாண்டவக் கோலத்தை அருளினார்.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர் நாகநாதர் இறைவி பெயர் பெரியநாயகி ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்திற்கு பேரம்பலம் என்று பெயர். இங்கு உள்ள மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலி கேட்கும்.

சிவ வடிவம் – 16. சதா நிருத்த மூர்த்தி

சதா என்றால் எப்போதும் என்று பொருள். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். சிவபெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் நடனம் ஆடியபடி சதாசர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இறைவனின் இந்த திருநடன உருவத்திற்கு நடராஜர் என்று பெயர். இந்த திருநடன உருவத்தினை உமையம்மை இடமிருந்து தரிசிக்கும் பொழுது சிவகனங்களும் தேவர்களும் நந்தி தேவரும் வாத்தியங்களில் இசையை ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த திருவுருவம் சதாநிருத்த மூர்த்தி ஆகும்.

சிவபெருமான் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும் அமைந்த கரத்தினால் காத்தலும் மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும் முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும் அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டேயுள்ளார். இங்கு இறைவனைக் கூத்தபிரான் என்றும் இறைவிக்கு சிவகாம சுந்தரி என்றும் பெயர்.

சிவ வடிவம் – 15. சந்த்யாந்ருத்தமூர்த்தி

அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து மந்திர மலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். மந்திர மலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விஷம் தேவர்களையும் அசுரர்களையும் துரத்தியது. எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். விஷத்தைக் கண்டு பயம் கொண்ட அனைவரும் சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்கு சென்றார்கள். கைலாயத்தினை வலம் வருகையில் எதிராக வந்து அந்த விஷம் விரட்டியது. மறு திசையில் சென்றார்கள். இவ்வாறான வலம் வரும் முறை சோம சூக்தப் பிரதட்சணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த விஷத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தேவர்களும் அரக்கர்களும் இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க ஆலகால விஷத்தை உண்டார். அவருடைய கழுத்துக்கு கீழே விஷம் இறங்காமல் இருக்க பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி நீலகண்டமாக உருவாகியது. அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை. எனினும் ஒரு திருவிளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கி மயங்குவது போல் உமா தேவியின் மடியில் மௌனமாய் படுத்தார். இதனைக் கண்ட தேவர்கள் அன்று முழுவதும் உறக்கம் உணவின்றி அவரை அர்ச்சித்து இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறு நாள் துவாதசியில் தேவர்கள் பாராயணம் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவபெருமான் சூலம் உடுக்கை சகிதம் ஒரு சாம காலம் சந்தியா தாண்டவம் திருநடனம் ஆடினார். இவ்வடிவம் சந்த்யான்ருத்த மூர்த்தி எனப்படுகிறது.

திருநடனம் ஆடிய காலம் பிரதோஷ காலமாகும். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை வரும் திரயோதசியை மாத பிரதோஷம் காலமாகும். வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா சிவராத்திரி வருடப் பிரதோஷ காலமாகும்.