சிவ வடிவம் – 14. புஜங்கத் ராசமூர்த்தி

பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்து பாம்பை அடக்கி தனக்கு ஆபரணங்களாக ஏற்றுக் கொண்ட சிவ வடிவம் புஜங்கத் ராசமூர்த்தி எனப்படுகிறது.

தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்‌ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்‌ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.

தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்‌ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்‌ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்‌ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்‌ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் பஞ்ச நாகங்களை உருவாக்கி அவரை நோக்கி ஏவினார்கள்.

இறைவன் அருகில் அந்த பாம்பு தன்னுடைய பற்களில் கடும் விஷத்துடன் சீறி வந்தது. இறைவன் பாம்பிற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு பஞ்ச நாகங்களில் ஒன்றை தன் இடுப்பில் ஆரமாகவும் இரண்டை தோள்களிலும் இரண்டை கால்களில் சிலம்பாகவும் அணிந்து கொண்டார். புஜங்கம் என்றால் பாம்பு. திராசம் என்றால் பயப்படுதல். பாம்பை தனது உடலில் ஏற்றுக் கொண்ட போது புஜங்கத் ராசமூர்த்தி என்று பெயர் பெற்றார்.

பெரும்புலியூர் கோயிலில் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார்.

சிவ வடிவம் – 13. புஜங்கலளிதமூர்த்தி

புஜங்கம் என்றால் பாம்பு. லளிதம் என்றால் அழகு ஆபரணம் என்று பொருள். பாம்புகளுக்கு அபயமளித்து பாம்பை தனக்கு அழகுடன் ஆபரணமாக அணிந்ததினால் இப்பெயரைப் பெற்றார்.

காசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும் வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள் மற்றவளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் கணவரான காசிபரை நாடினார். கணவரோ கத்துருவே அழகி என்று கூறினார். இதன் விளைவாக வினத்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

வினதையின் இளைய மகன் கருடன் இந்த செய்தியை அறிந்து தன் தாய் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என தன் பெரியம்மாவிடம் கேட்டார். அதற்கு கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டு வந்தால் உன் தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கின்றேன் எனக் கூறினாள். கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற முயற்சித்தான். அப்போது திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக் கேட்டார். கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூறினான். சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய திருமால் பாம்புகளுக்கு அமுதம் கொடுக்க கூடாது. மேலும் நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும் என்று இரு வரம் கேட்டார். கருடன் தன் அகந்தை அழிந்து திருமாலை வணங்கி அமிர்தத்தை பெற்று தன் அன்னையை அடிமை தளையிலிருந்து மீட்டார். தன்னிடம் இருந்த அமிர்தத்தை பாம்புகளுக்கு கொடுக்காததினால் பாம்புகளால் கருதப்பட்டான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்தான். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றுப் பின்னர் திருமாலின் வாகனமானார்.

கருடன் அமிர்தம் கொடுக்காததினால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு அழியா புகழும் கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார். பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல் துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக் கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச் செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.

சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் திருப்பெரும்புலியூர். இங்கு புஜங்கலளிதமூர்த்தி உள்ளார்.

சிவ வடிவம் – 12. இடபாந்திகமூர்த்தி

சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி இடக்காலை ஊன்றி வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். அறவெள்விடைக்கு அருளிய வடிவம் என்ற வேறு பெயரும் உள்ளது.

கிருத யுகம் துவாபர யுகம் த்ரேதாயுகம் கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 43 லட்சத்து 21000 மனித வருடங்கள். அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது முடிந்தால் அது பிரம்மாவின் ஆயுட்காலமாகும். பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது கணக்கு. அழியும் ஊழிக் காலத்தில் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்ம தேவதை வேதனை கொண்டது. ஊழிக் காலத்தில் தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது என்று சிந்தித்தது.

சிவபெருமானிடம் சரணடைவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்ம தேவதை சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது. தருமத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும் திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும் துவாபர யுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவாவடுதுறை மாசிலாமணிஸ்வரர் கோயிலில் இடபாந்திக மூர்த்தி உள்ளார்.

சிவ வடிவம் – 11. இடபாரூடமூர்த்தி

இடபம் என்றால் காளை. காளையுடன் இருக்கும் சிவனின் உருவத்திருமேனி இடபாரூடர் என்று வழங்கப்படுகிறது.

ஏறமர் கடவுள்
விடையேறிய விமலர்
விடையேறுவர்
விருஷப வாகனன்
பெற்றம் ஊர்ந்தவர்

என்று வேறு பெயர்களும் உள்ளது.

திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும் போருற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும் சிவபெருமானும் உமாதேவியும் தரும தேவதையாகிய வெண்ணிற ரிஷப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வந்தனர். இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக் கண்ட சிவபெருமான் ரிஷப வாகனத்தை விட்டு இறங்கி மேரு மலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற தலைகனம் ஏற்பட்டது.

இதனை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத ரிஷப வாகனமாகிய விஷ்ணு இரு செவி இரு கண்கள் மூக்கு போன்றவை பிதுங்கியும் இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். விஷ்ணுவின் தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க விஷ்ணுவும் சிவபெருமானின் வாம பாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு இடபாரூட மூர்த்தி என்ற பெயர் உண்டானது.

விராதனூர் – மதுரை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
திருத்துறையூர் – பண்ருட்டி
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
விசயமங்கை – கோவிந்தபுத்தூர் – சுதை வடிவில் உள்ளது.
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதைவடிவில் உள்ளது.
திருப்பழுவூர் –  கீழைப் பழுவூர் அரியலூர் –  சுதை வடிவில் உள்ளது.
திருவான்மியூர் – சுதை வடிவில் உள்ளது.
திருவேற்காடு – சுதை வடிவில் உள்ளது.

பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.

சிவ வடிவம் – 10. சந்திரசேகரமூர்த்தி

சிவபெருமான் சந்திரனை தனது தலையில் தரித்த கோலமே சந்திரசேகரமூர்த்தி வடிவமாகும். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்று பொருள். சந்திரன் முழுதுமாக தேய்ந்து விடாமல் காத்து அருளியதால் இறைவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

பிறையோன்
பிறை சூடிய பெம்மான்
பிறைசூடன்
தூவெண்மதிசூடி
பிறையன்
மதிசெஞ்சடையோன்
இந்து சேகரன் – இந்து என்பது சந்திரனின் மற்றொருப் பெயர்
மதன சேகரன் – மதனன் என்றாலும் சந்திரனை குறிக்கும் மற்றொரு பெயர்.
பிறைசூடி
மாமதிசூடி

என வேறு பெயர்களும் உள்ளது. சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.

  1. கேவல சந்திரசேகர் – கேவல என்றால் தனித்து நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி தனித்து நிற்கிறார்.
  2. உமா சந்திரசேகர் – இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.
  3. ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவிய நிலையில் இருக்கிறார்.

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகிக்காமல் தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான் முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதி கொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையுமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒரு கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும் என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திரசேகரன் ஆனார்.

சந்திரசேகரமூர்த்தியின் திருவுருவம் திருவாரூர் (புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். பிறை சூடிய சந்திரசேகர மூர்த்தியின் செப்புத் திருமேனிகள் பிள்ளையார் பட்டி திருநெல்வேலி பாபநாசம் தேவதானம் மதுரை வீரபாண்டி கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. மேலும் பல புராண கோயில்களில் இவரது திருவுருவம் உள்ளது.

சிவ வடிவம் 9. சோமாஸ் கந்தமூர்த்தி

சோமாஸ்கந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும் உமையுடனும் இருக்கும் வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் சிவனுமைமுருகு என்ற தூய தமிழ் பெயர்களும் உண்டு.

சூரபத்மனின் கொடுமைகள் எல்லை கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத விண்ணோர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். வல்லமை பெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. இதனைக் கண்ட தேவர்கள் கலங்கினர். பார்வதி தேவி தனது கொலுசுமணி சிதற அங்கிருந்து கிளம்பினாள். சிவபெருமான் வாயு தேவனையும் அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளை கங்கையில் விடச் சொன்னார். கங்கை அப்பொறிகளை சரவணப் பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப் பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரே குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும் பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும் கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் கயிலை மலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றமே சோமாஸ் கந்த மூர்த்தி ஆகும்.

இந்திரன் அசுரர்களின் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக திருமாலை வழிபட்டான். அவனுக்கு திருமால் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினார். அதனை இந்திரன் இந்திரலோகத்தில் வைத்து பூஜித்து வந்தான். அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு அசுரர்களை வென்றான். இந்திரன் வைத்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தனக்குத் தரும்படி முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். அதற்கு இந்திரன் இது திருமாலுடையது. அவர் சம்மதம் இல்லாமல் நான் தரமுடியாது என்று கூறினான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி திருமாலை வணங்கி அந்த சிலையை பெறுவதற்கான அனுமதியை பெற்றான். ஆனாலும் அந்தச் சிலையை கொடுக்க மனம் இல்லாத இந்திரன் தேவ சிற்பியைக் கொண்டு அதே போன்று 6 வடிவங்களைச் செய்தான். அதில் சரியான சிலையை முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்துக் கொண்டார. இதனால் மற்ற சிலைகளையும் அவனிடமே கொடுத்து பூலோகத்தில் வைத்து பூஜிக்கும்படி இந்திரன் அறிவுறுத்தினான். திருமால் இந்திரன் இருவரும் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் நிறுவினார். மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக்காரோணம் திருநள்ளாறு திருக்காறாயில் திருவாய்மூர் திருமறைக்காடு திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். இத்தலங்கள் சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

குமார சம்பவம் என்ற அற்புதமான காவியத்தை இயற்றிய காளிதாசன் உலகத்துக்கே பெற்றோர்களைப் போல இருக்கும் வகையில் அந்த தோற்றத்தைத் தருகிறார்கள் என எழுதி உள்ளார். குமரகுருபரர் தன்னுடைய நூலான பிறப்பான் திரட்டு என்னும் நூலில் இந்த மூன்று உருவங்கள் சத்வம் தமஸம் மற்றும் ராஜாஸ் என்ற மூன்று குணங்களையும் குறிப்பிடுவதாகவும் சோமஸ்கந்தனை நகிலம்குலவி (குழந்தை) எனவும் எழுதி உள்ளார். குமாரவேல் கந்தபுராணத்தில் சிவன் பார்வதி இருவரின் தோற்றங்களை இரவும் பகலும் எனவும் ஸ்கந்தனை மாலையைப் போன்றது என்று கூறுகிறது. சத் – சக்தி சித் – சிவம் ஆனந்தம் – முருகன். இந்த மூவரின் ஒருங்கிணைந்த வடிவமே சோமாஸ்கந்த வடிவம். உண்மை அறிவு இன்பம் ஆகிய மூன்று இயல்புகளின் ஒருங்கிணைந்த அழகிய வடிவமே சோமாஸ்கந்த வடிவம் என்று தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் வெள்ளிமலை நீலிமலை மருதமலை உள்ளது. இதில் வெள்ளி மலை சிவன் உருவம். நீலிமலை உமை உருவம். மருதமலை கந்தன் உருவம் என மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் விளங்குவதாக பேரூர்ப் புராணம் கூறுகிறது. மலைகளைப் போல் ஆறுகளில் அலகாபாத்தில் கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. இவற்றுள் கங்கை நதி சிவபிரானை ஒத்து செந்நிறமாயும் யமுனை நதி உமையவளை ஒத்ததாய் நீலநிறம் உடையதாயும் சரஸ்வதி நதி கந்தன் நிறத்தினதாய் வெண்மையாகவும் சோமாஸ்கந்த வடிவ அமைப்பில் உள்ளதாக திருவாரூர் நான்மணிமாலை கூறுகிறது. குமரகுருபரரும் இதே கருத்தை கூறுகிறார்.

திருநெல்வேலி நெல்லயப்பர் கோவில்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
குமரக் கோட்டம்
காமாட்சியம்மன் கோயில்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி குடை வரைக் கோயில்
கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார் கோயில்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கள்ளி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தியமங்கலம் பவானீஸ்வரர்
திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் கோயில்
உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் இலங்கை திருக்கேதீச்சரத்தில் உள்ளது.

ஆகிய கோயில்களிலும் மேலும் பல பழமையான கோயில்களிலும் சோமாஸ் கந்த மூர்த்தி உள்ளார். ராஜ சிம்ம பல்லவர் என்ற இரண்டாம் நரசிம்ம வர்மன் தான் எழுப்பிய சிவாலயங்களில் கருவறையின் உள்ளே சோமாசுகந்த புடைப்புச் சிற்பத்தினை செதுக்கியுள்ளார். சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தை பித்தளை உலோகங்களில் சோழர்கள் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவரில் சிறுதொண்ட நாயனாருக்கு மட்டும் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளித்துள்ளார் இறைவன்.

சிவ வடிவம் – 8. உமேசமூர்த்தி

சிவபெருமான் வெண்ணீறு பூசிய மேனியுடன் மான் மழு அஞ்சேல் அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்திருக்க அருகே உமாதேவி குவளை மலர் ஏந்தி அமர்ந்திருக்க உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பது உமேசமூர்த்தி வடிவமாகும்.

நான்முகன் தன்னுடைய படைத்தல் தொழிலுக்கு உதவியாக நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பதைக் கண்ட அவர்கள் நால்வரும் படைப்பு தொழிலை செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தினை அடைய விரும்பினார்கள். எனவே ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கையிலை நோக்கி சென்றார்கள். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பது போல் தாமும் உமையுடன் இருப்பதைக் கண்டால் நால்வருக்கும் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என எண்ணிய சிவபெருமான் தன் அருகே இருந்த உமையையும் சேர்த்து சுற்றியிருந்த அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் பார்க்க அனைவரும் எரித்து சிவபெருமானிடம் ஒடுங்கினார்கள். பின் ஞானத்தை தேடி தன்னிடம் வந்த நால்வருடன் தனித்து அமர்ந்து நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார். பின்பு தனது இடத்தோளைப் பார்த்தார். அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றியிருந்த உமையம்மை வெளிப்பட்டு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்தாள். இருவரும் சேர்ந்து அருள் செய்ய சிவபெருமானிடம் ஒடுங்கிய அனைவரும் வெளிப்பட்டார்கள். அனைவரும் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்கள். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து காத்து துயர்துடைத்து அனைத்தையும் வாழ வைக்கும் சக்தியாக உமையவள் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு ஆனந்தப்பட்டனர். சிவபெருமானது பெயரில் உமையவளின் பெயரும் சேர்ந்து உமேச மூர்த்தி ஆனது.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலில் மூலவர் இம்மூர்த்தியின் திருப்பெயரிலேயே இருக்கிறார். கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் உள்ளது.

சிவ வடிவம் – 7. சுகாசனமூர்த்தி

சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும். சுகாசனர் வடிவத்தில் இடக் காலை மடக்கி வைத்து வலக் காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார். நல்லிருக்கை நாதர் என்ற தூய தமிழ் பெயரும் உள்ளது.

வெள்ளி மலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் ஜோதி மயமான சிவபெருமான் நடு நாயகனாக வீற்றிருக்க அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும் தேவர்களும் முனிவர்களும் அமரர்களும் அவரை வழிபட்டபடி இருப்பார்கள். சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருப்பார். உமாதேவியார் இறைவனின் தாள் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் சுகாசன நிலையில் அமர்ந்த படி விடையளித்தார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி விளக்கிய காரணத்தால் இவர் சுகாசன மூர்த்தி என்ற பெயரை பெற்றார். சுகா என்பது மனம் மற்றும் உடலின் மகிழ்ச்சியான நிலையைக் குறிக்கிறது. ஆசனம் என்பது யோகத்தில் அமரும் ஒரு உடல் நிலையைக் குறிக்கிறது. மகிழ்ச்சியாக யோகத்தில் அமர்ந்த நிலையில் உமாதேவியாருக்கு இறைவன் உபதேசித்துள்ளார். இவரது கரங்கல் மான் மழு உள்ளது.

சுகாசன மூர்த்தி சீர்காழி திருத்தலத்தில் உள்ளார். தஞ்சை கலைக்கூடத்தில் சுகாசன மூர்த்தி உள்ளார்.

சிவ வடிவம் – 6. உமாமகேசமூர்த்தி

முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே திருக்கைலையில் அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும். உமா மகேசுரர் ஒரு முகமும் நான்கு கைகளையும் கொண்டிருப்பவர். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அது போல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே தாயாவார். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும் நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமாகி பிரிக்க முடியாதபடி இருப்பவள். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே

  1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
  2. ஆதிசக்தி – பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  3. இச்சா சக்தி – ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  4. ஞானசக்தி – இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  5. கிரியாசக்தி – ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத ஒன்று.

முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து மகிழ்ந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். உலகைக் காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள் பூமாதேவி. பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரச மரம் இருந்தது. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்க வேண்டிய இடம் இதுவென உணர்ந்தாள் பூமாதேவி. தேவ சிற்பியான விஸ்வகர்மா அங்கே முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி நாள்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்து பூமாதேவி கேட்ட வரத்தை அருளினார்.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை செல்லும் முன் வழிபட்ட திருவஞ்சைக் களத்தப்பர் கோயில் (கொடுங்களூர் பகவதி கோயில் அருகில் உள்ளது). இந்தக் கோயிலின் வடக்கு உள் பிராகாரத்தில் உமாமகேஸ்வரர் சந்நிதி உள்ளது. கேரளாவில் அநேக கோயில் களில் உமாமகேச வடிவங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் காணப்படுகின்றன. குருவாயூர் அருகே மம்மியூர் சிவாலயத்தில் உமாமகேசர் திருவுருவம் வண்ண ஓவியமாகத் திகழ்கிறது. நேபாளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வர வடிவங்கள் விசேஷமானவை. இவை ரூபமண்டலம் விஷ்ணு தர்மோத்தரம் முதலான நூல்களில் கூறியுள்ளபடி அமைந்துள்ளன. உயர்ந்த பீடத்தில் சிவபெருமான் வீற்றிருக்க அவருக்கு இடப் புறம் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் உமாதேவி. சில கோயில்களில், கருவறை விமானத்திலும் உமாமகேச வடிவங்களைக் காணலாம்.

டெல்லி அருங்காட்சியகத்தில், சாளுக்கியர் காலத்து உமாமகேஸ்வரர் வடிவம் ஒன்று உள்ளது. மைசூரை ஆட்சி செய்த ஹைதர்அலி ஒரு புறம் உமாமகேசர் வடிவமும் மறுபுறம் ஹை என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டிருக்கிளார். 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் உமாதேவியை மடி மீது அமர்த்தியபடி சிவபெருமான் காட்சி தருகிறார். சோழர்கள் காலத்தில் உமாமகேசர் திருவுருவங்களை தங்கத்தால் செய்து வழிபட்ட வழக்கம் இருந்து என்பதை திருவிடைமருதூர் கல்வெட்டில் காண முடிகிறது.

சிவ வடிவம் – 5. மகா சதாசிவமூர்த்தி

மகா சதாசிவ மூர்த்தி கயிலையில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும் ஐம்பது கைகளுடன் 75 கண்களுடன் இருப்பார். மகா என்றால் அளவற்ற என்று பொருள். சதாசிவ என்றால் எப்போதும் அன்பானவர் அருளானவர் பேரின்பமானவர் என்று பொருள். மகா சதாசிவமூர்த்தி என்றால் அளவற்ற அருளாளனும் அன்பாளனும் பேரின்ப வடிவமானவர் என்று பொருள். இவரைச் சுற்றி இருபத்தி ஐந்து மூர்த்திகள் இருப்பார்கள். ருத்ரர்களும் சித்தர்களும் முனிவர்களும் வணங்கக் கூடியவராக இருக்கிறார். மகா சதாசிவமூர்த்தி கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவர் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாசதாசிவ மூர்த்தியின் வடிவம் சிவபெருமானின் மற்ற வடிவங்களைப் போல கோவில்களில் சிலை வடிவாக இருப்பதில்லை. பெரும்பாலும் இவை கோவில் கோபுரங்களில் சுதை வடிவில்தான் காணப்படும். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிதம்பரம் நடராஜர் ஆலயம் வைத்தீஸ்வரன் கோவில் காஞ்சிபுரம் கரகரேஸ்வர் கோவில்களில் இந்த சிற்பத்தை சுதை வடிவில் தரிசிக்க முடியும்.