சிவ வடிவம் – 4. சதாசிவமூர்த்தி

சதாசிவமூர்த்தி தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவன் வடிவமாகும். தூய ஸ்படிக நிறத்துடன் சடாமுடியுடன் ஐந்து திருமுகங்களும் பத்துக் கரங்களும் நெற்றிக்கண் உட்பட பதினைந்து திருக்கண்களுடன் காட்சியருளும் சதாசிவனைத் தியானிக்குமாறு ஆகமங்கள் கூறுகின்றன. உத்தர காமிகத்தின் படி வலக்கையில் சூலமும் மழுவும் கட்வாங்கமும் வச்சிரமும் அபயமுத்திரையும் கொண்டும் இடக்கையில் நாகம் மதுலிங்கப்பழம் நீலோற்பலம் உடுக்கை மணிமாலை கொண்டும் காட்சியளிக்கிறார். சதாசிவமூர்த்தி ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் தோன்றுகிறார். இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர்.

  1. ஈசானம் முகம் ஸ்படிக நிறத்தில் மேலே மேல் நோக்கியபடி உள்ளது.
  2. தத்புருடம் வெண்மை கலந்த மஞ்சள் கிழக்கு நோக்கியபடி உள்ளது.
  3. அகோரம் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் தெற்கு நோக்கியபடி உள்ளது.
  4. வாமதேவர் காவி நிறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது.
  5. சத்யோஜாதம் சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறத்துடன் மேற்கு நோக்கியபடி உள்ளது.

தியான பூஜைக்காக சகளத் திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப் பாகத்தில் சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே பிரமனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரண கர்த்தாவாவார்.

சதாசிவ மூர்த்தி ஐந்து முகங்கள் பத்து திருக்கரங்கள் பதினைந்து கண்கள் கொண்டு தாமரைப் பீடத்தில் நிற்கும் திருமேனியர் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் போற்றுகிறார்.

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே. பாடல் 1730

சதாசிவமூர்த்தி உயிர்கள் உய்ய வேண்டி தனது ஐந்து முகங்கள் வழியாக ஐந்து தொழில்களைப் புரிகிறார். இவை படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் மற்றும் அருளை ஆகிய ஐந்து தொழில்கள் ஆகும். 1. சத்யோஜாதம் முகம் படைக்கும் சக்தியாகும். 2. அகோரம் அழிக்கும் சக்தியாகும். 3. தத்புருஷம் மறைக்கும் சக்தியாகும். 5. ஈசானம் அருளும் சக்தியாகும். வேதங்களும் ஆகமங்களும் சதாசிவனின் ஐந்து முகங்களால் வெளிப்படுகின்றன. இந்த ஐந்து முகங்களும் ஐந்து மந்திரங்களைக் கொண்டது என்றும் இந்த ஐந்து மந்திரமே சதாசிவனின் உடல் என்றும் மிருகேந்திரஆகமம் கூறுகிறது.

சதாசிவமூர்த்தி தனது சத்யோகஜாதம் முகத்திலிருந்து காமிகம் யோகசம் சிந்தியம் காரணம் அசிதம் ஆகிய ஐந்து ஆகமங்களை அருளினார். வாமதேவ முகத்திலிருந்து தீப்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்ற ஆகமங்களை அருளினார். அகோரம் முகத்திலிருந்து விசயம் நீச்சுவாசம் சுவயம்புவம் ஆக்நேயம் வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். தத்புருடம் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம் இலளிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பரமேச்சுவரம் கிரணம் வாதுளம் எனும் எட்டு ஆகமங்கள் என மொத்தம் 28 ஆகமங்களை சதாசிவமூர்த்தி உபதேசித்தார்.

சிதம்பரம் கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும் மேலைக் கோபுரத்தின் முதல் நிலையின் மேற்புறத்தில் வலப் பக்கமும் கிழக்கு கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும் 2 ஆம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும் சந்நிதி நுழை வாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

காஞ்சிபுரம் கரகரேசுவர்ர் கோயிலின் விமானத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

வைத்தீசுவரன் கோயில் கோபுரத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 2 ஆம் கோபுரத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

எலிபெண்டா குகையில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

சதாசிவ மூர்த்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ராஜராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விமானத்தின் பல நிலைகளிலும் சதாசிவ மூர்த்தி சிலைகளை அமைத்து வைத்திருக்கிறான். மேலும் சதாசிவத் தத்துவத்தை விளக்கும் பஞ்ச தேக மூர்த்தி என்ற பஞ்சலோகத் திருமேனியையும் இந்தக் கோயிலில் அமைத்து வழிபட்டான். இதன் வடிவமைப்பு அளவு எடை ஆபரணங்கள் ஆகிய செய்திகளைக் கூறும் கல்வெட்டையும் இங்கு பொறித்து வைத்துள்ளான். ஆனால் தற்போது இந்த வடிவம் இங்கு இல்லை.

தஞ்சாவூர் ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு திருமுகங்களுடன் உச்சியில் ஈசான முகம் சேர்த்து ஐந்து திருமுகங்கள் மற்றும் பத்து திருக்கரங்களுடன் வீராசன கோலத்தில் திகழும் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.

சென்னை அருங்காட் சியகத்தில் சதாசிவமூர்த்தியின் செப்புத் திருமேனி உள்ளது.

சிவ வடிவம் – 3.முகலிங்கமூர்த்தி

சிவலிங்கத்தில் முகம் இருந்தால் அந்த லிங்கம் முகலிங்கம் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம் அநாட்யம் சுரேட்டியம் சர்வசமம்/சர்வசம் ஆகும்.

  1. ஆட்யம் – 1001 லிங்கங்களை கொண்டது
  2. அநாட்யம் – முகம் இல்லாதது
  3. சுரேட்டியம் – 108 லிங்கங்களை கொண்டது
  4. சர்வசமம்/சர்வசம் – 5 முகம் கொண்டது (ஈசானம் தத்புருடம் அகோரகம் சத்யோஜாதம் வாமம்) இவ்வடிவ வகையில் ஒரு முகம் கொண்ட ஏகமுக லிங்கம். இரு முகம் கொண்ட துவிமுக லிங்கம். மூன்று முகம் கொண்ட திரிமுக லிங்கம். நான்கு முகம் கொண்ட சதுர்முக லிங்கம். ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக லிங்கம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன.

பிரம்மா படைக்கும் தொழிலையும் விஷ்ணு காக்கும் தொழிலையும் உருத்ரன் அழிக்கும் தொழிலையும் மகேஸ்வரன் மறைக்கும் தொழிலையும் சதாசிவன் அருளும் தொழிலையும் செய்கிறார்கள். இந்த ஐவருக்கும் ஆதார சக்தியாக உள்ளவர் பரசிவம் ஆகும். அவனையே நாம் முகலிங்கத்தில் மூலமாக தரிசிக்கலாம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பெரிய நாயகர் சந்நிதிக்குத் தெற்கே நிருதி மூலையில் ஒரு ஏகமுக லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பலத்தில் ரகசியத்துக்கு அருகில் ஒரு முகலிங்கம் உள்ளது.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு மேற்காக முகங்கள் அமைவதே துவிமுக லிங்கம் அல்லது இரு முக லிங்கம் எனப்படும். கிழக்கு முகம் தத்புருஷம் என்றும் மேற்கு முகம் சத்யோஜாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

தென்னாற்காடு மாவட்டம் திருவக்கரை திருத்தலத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக திரிமுக லிங்கம் உள்ளது. சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சி கொடுக்கிறார். ஈரோடு மகிமாலீஸ்வரர் ஆலயத்திலும் திரியம்பக லிங்கம் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் மூன்று முகத்துடன் உள்ளார். இவரின் மூன்று முகங்களைத் தங்கத்தால் செய்து அணிவித்துள்ளனர்.

சிவ லிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம் மேற்கில் சத்யோஜாதம் வடக்கில் வாம தேவம் தெற்கில் அகோரம் என நான்கு முகங்கள் இருக்கும். திருவானைக்காவல் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆகிய ஆலயங்களிலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது சதுர்முக லிங்கம். இது மார்பு வரை இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் ஜப மாலையும் மற்றொரு கையில் அமுதக் குடமும் உள்ளது. நான்கு முக லிங்கம் ஆகையால் இக்கோயிலில் நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் உள்ள கோயிலுக்கு தமிழில் நான்முகக் கோயில் என்றும் வடமொழியில் சர்வதோ பத்ராலயம் என்று பெயர்.

நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன் கிழக்குத் திசையில் அதிகப்படியான ஒரு முகத்துடன் ஐந்து முகங்களுடன் விளங்குகிறது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ள சந்நிதியில் பஞ்ச லிங்கம் உள்ளது. இவ்வகை லிங்கங்கள் வட இந்தியாவில் சில கோயில்களிலும் நேபாளத்திலும் உள்ளது. வட மாநிலங்களில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பஞ்சமுக லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆறுமுக லிங்கம் என்று சொல்லப்படும் லிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளை நோக்கியும் ஐந்தாவது முகம் உச்சியில் வானத்தை நோக்கி ஊர்த்துவ முகம் என்றும் ஆறாவது முகம் கீழ் நோக்கி அதோ முகம் என்றும் அழைக்கப்படும்.

சிவ வடிவம் – 2. இலிங்கோத்பவமூர்த்தி

பரசிவத்தின் அருளால் பிரளய காலம் முடிந்து சர்வ சிருஷ்டி ஆரம்பித்தது. அப்போது பிரம்மத்திலிருந்து பிரகிருதி எனப்படும் மாயாதேவியும் அவள் தோன்றிய அதே நேரத்தில் பிரம்மத்தினிடமிருந்து மாயபுருஷனும் தோன்றினார்கள். மாயாதேவியும் மாய புருஷனும் ஒன்று சேர்ந்து தாங்கள் இருவரும் தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் என்னவென்று ஆலோசித்து கொண்டிருந்ததார்கள். அப்போது உங்கள் சந்தேகத்துக்கான விளக்கம் தெரிய வேண்டுமானால் தவம் செய்யுங்கள் என்று ஓர் அசரீரி கேட்டது. அசரீரி வாக்குப்படி இருவரும் கடுமையான தவம் மேற்கொண்டார்கள். வெகு காலம் சென்றது. ஒரு நாள் மாயாதேவியும் மாய புருஷனும் தங்கள் யோக நிஷ்டையிலிருந்து விழித்துக் கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் தவம் செய்திருப்பதை எண்ணினார்கள். அப்போது அவர்கள் தேகத்திலிருந்து நீர் பெருக்கெடுத்தது. அந்த நீர் பெருக்கு சகல லோகங்களிலும் வியாபித்து எங்கும் ஒரே நீராக நிறைந்து நின்றது. மிகவும் களைப்பில் இருந்த மாயா புருஷன் மாயாதேவியோடு சேர்ந்து அனேக காலம் நீரிலே நித்திரை செய்தார்கள். அப்போது முதல் மாயாபுருஷனுக்கு நாராயணன் என்றும் மாயாதேவிக்கு நாராயணி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்கள் நீரில் இருந்த இடமே திருப்பாற்கடல் என்று பெயர் பெற்றது.

நாராயணனின் நாபியிலிருந்து அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. எண்ணற்ற இதழ்களோடு கூடியதும் அனேக யோசனை அகலமும் உயரமும் உடையதாயும் நறுமணத்தோடு கூடியதுமான அம்மலரிலிருந்து நான்முகன் அவதரித்தார். மாயை காரணமாகப் பிரம்மதேவனுக்குத் தாம் யார் என்பதும் எங்கிருந்து வந்தோம் என்பதும் என்ன காரியத்துக்காகத் தாம் தோன்றியுள்ளோம் என்பதும் விளங்கவில்லை. எப்படியும் தம்மைத் தோற்றுவித்தவர் யார் என்பதைக் கண்டு கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவர் தாமரை மலரின் அடிப்பாகத்திற்குக் காம்பின் வழியாக இறங்கத் தொடங்கினார். கீழே இறங்கிச் செல்லச் செல்ல முடிவே இல்லாது பயணம் நீண்டது. எத்தனையோ வருட காலம் சென்றது. பிரம்மதேவன் இன்னமும் கீழே இறங்கிச் சென்று கொண்டிருந்தார். அவருக்குக் களைப்பு மேலிட்டது. கீழே செல்வதை நிறுத்தி விட்டு மேல் புறமாக ஏறத் தொடங்கினார். அங்கும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. இதழ்களுக்கிடையில் சுற்றிச் சுற்றி வந்தது தான் மிச்சம். யாரையும் காணவில்லை. அவர் மிகவும் சோர்வடைந்து மூர்ச்சையாகி விழுந்தார். அப்போது தவம் செய்தாயானால் நீ விரும்பும் காரியம் பூர்த்தியாகும் என்று ஓர் அசரீரி எழுந்தது. பிரம்மதேவன் பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்தார். அப்போது தான் யார் என்றும் படைக்கும் தொழிலுக்காக சிருஷ்டிக்கப்பட்டோம் என்றும் அவருக்கு புரிந்தது.

அப்போது சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் நாராயணன் அவருக்குக் காட்சி தந்தார். அவரைப் பார்த்ததும் நான்முகனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நாராயணனைப் பார்த்து நீ யார்? என்று கேட்டார். அவரோ நான் உனது தந்தை என்றார். நானே படைக்கும் தொழிலை செய்பவன் நான் படைக்காமல் நீ எப்படி வருவாய் என்று கேள்வி கேட்டார். இதனால் யார் பெரியவர் என்று இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரசிவம் ஜோதி ரூபமாக அடிமுடி காண முடியாதபடி தோன்றி நின்றார். தங்கள் இருவரைத் தவிர புதிதாக ஒரு ஜோதி தோன்றியிருக்கிறது. யார் இது என்று சிந்தித்தார்கள். அப்போது ஜோதியிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும் முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட கிளம்பினார். நாராயணன் வராகமாக மாறி அடியைத் தேட கிளம்பினார். இருவராலும் அடிமுடியைக் காணவில்லை. இருவரும் சரணம் என்று ஜோதியாய் நின்ற பரசிவனை சரணடைந்து பூஜித்தார்கள். அவர்கள் இருவரும் வணங்கி பூஜித்த உருவமே லிங்கோத்பவர் ஆகும். வானுக்கும் பூமிக்குமாக அடிமுடி காண முடியாமல் நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும்.

சிவ வடிவம் – 1. இலிங்க மூர்த்தி

பர சிவத்தை புராணங்களும் வேதங்களும் கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. பரசிவமே அனைத்துமானது. பிறவி இல்லாமல் ஆதியிலிருந்தே இருப்பது. அழிவென்பதே இல்லாதது. ஈரேழு உலகங்களும் தோன்றுவதற்கும் அந்த உலகங்கள் அழிய காரணமாயிருப்பதும் இந்த பரசிவம்தான். உருவமில்லாதது. நிறமில்லாதது. குணம் இல்லாதது. மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. இதுதான் இந்த பர சிவம் என்று சொல்லால் செயலால் குறிப்பால் என்று எதனாலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதது. இன்னதென யாராலும் சுட்டிக்காட்ட இயலாதது. நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தி இந்த பரசிவம் ஆகும். உயிர்கள் உய்வதற்காகவும் அருளுவதற்காகவும் இந்த பர சிவமே லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

பரசிவம் அருவம் உருவம் அருவுருவம் என்னும் மூன்று நிலைகளில் அருவமாக ஜோதிவடிவத்திலும் உருவமாக தலை கை கால் என உறுப்புகளுடனும், அரு உருவத்தில் இலிங்க வடிவிலும் அருளுகிறது. தென்னகத்தில் உள்ள புராண தலங்களில் அதிக பட்சம் சுயம்புவாக தோன்றிய லிங்கமே உள்ளது.

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் லிங்க வடிவைப்பற்றி பல கருத்துக்கள் உள்ளது. அவற்றில் சில

இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும். பரம் பொருளை உயிர்கள் உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருப்பது இலிங்கமே ஆகும். இலிங்கத்தில் பாணம் என்று அழைக்கப்படும் மேல் பகுதியானது பிரபஞ்சத்தோடு எப்போதும் தொடர்பில் இருந்து உலகில் உள்ள தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்றது. இலிங்கத்தில் ஆவுடையார் என்று அழைக்கப்படும் அடிப் பகுதியானது பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தில் பலிபீடம் என்று அழைக்கப்படுகின்ற நடுப் பகுதியானது தம்மை வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும். இலிங்க விடிவில் இறைவனை பூஜித்து இறைவனை அடைவதை மட்டுமே தனது கூறிக்கோளாக கொண்டவர்கள் அதற்கான முறைகளை அறிந்து அந்த முறைப்படி செய்கின்றவர்களுக்கு இறைவனின் அம்சமாகவே சாதகரையும் மாற்றக் கூடியது இலிங்கம் ஆகும்.

முன்னுரை

சிவனின் 64 வடிவங்கள்

சிவவடிவங்கள் அறுபத்து நான்கு என்பவை இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் அழைப்பார்கள். இறைவனுக்கு 5 முகங்கள் உள்ளது. ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோசாதம் என்ற இந்த ஐந்து முகங்களிலிருந்து முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை

ஈசானம் – 1. சோமாஸ்கந்தர் 2. நடராஜர் 3. ரிஷபாரூடர் 4. சந்திரசேகரர் 5. கல்யாணசுந்தரர்
தற்புருஷம் – 1. பிட்சாடனர் 2. காமசம்ஹாரர் 3. சலந்தராகரர் 4. கால சம்ஹாரர் 5. திரிபுராந்தகர்
அகோரம் – 1. கஜசம்ஹாரர் 2. வீரபத்திரர் 3. தட்சிணாமூர்த்தி 4. நீலகண்டர் 5. கிராதர்
வாமதேவம் – 1. கங்காளர் 2. கஜாரி 3. ஏகபாதர் 4. சக்ரதானர் 5.சண்டேசர்
சத்யோசாதம் – 1. இலிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. அர்த்தநாரீஸ்வரர் 4. அரியர்த்த மூர்த்தி 5. உமாமகேஸ்வரர்

இந்த இருபத்தியைந்து மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் என சிவனின் வடிவங்கள் பலவற்றை புராணங்கள் கூறுகிறது.

அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும் அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈக்காடு இரத்தினவேலு என்பவரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த 64 ரூபங்களைப் பற்றி பாம்பன் சுவாமிகள் அட்டாட்ட விக்கிரக லீலை எனும் பதிகம் செய்துள்ளார். இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் 1. போக வடிவங்கள் 2. யோக வடிவங்கள் 3. கோப வடிவங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

போக வடிவம்:

  1. உமாமகேஸ்வரர்
  2. சந்திரசேகரர்
  3. ரிஷபாரூடர்
  4. மாதொருபாகர்

யோக வடிவம்:

  1. தட்சிணாமூர்த்தி
  2. ஞான தட்சிணாமூர்த்தி
  3. யோக தட்சிணாமூர்த்தி
  4. வீணா தட்சிணாமூர்த்தி
  5. சுகாசனர்

கோப வடிவம்:

  1. கங்காளர்
  2. வீரபத்திரர்
  3. திரிபுராந்தக மூர்த்தி
  4. கஜயுக்த மூர்த்தி
  5. காலந்தக மூர்த்தி

இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும் பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவ வடிவங்களை உருவம் அருவம் அருவுருவம் என்று மூன்று வகைப்படுத்தலாம்.

உருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் இருக்கின்ற சிலை மூர்த்திகளே உருவம் ஆகும்.

அருவ நிலை: உருவமே இல்லாத ஒளி ஒலி வடிவத்திலுள்ள சிவசக்தியின் நிலையே அருவம் ஆகும்.

அருவுருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் எதுவும் இல்லாமல் சிவலிங்க வடிவத்தில் இருப்பதே அருவுருவ நிலை ஆகும்.

இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும்.