நம்முடைய உலகம் இருக்கும் அண்டத்தைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாதபடி பரந்து விரிந்துள்ள ஆகாயத்தில் உள்ளன. அதில் நடுநாயகமான சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரது திருமேனியைக் காண கண்கள் ஒளியிழக்கின்றன. அவ்வாறான ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் இடத்தின் விரிவு அநேக கோடி யோசனை தூரமாகும். சிவபெருமானின் வலப்புறம் மழுவும் சூலமும் இடப்புறமாக கலசமும் கொண்டு இவ்வுலகிலுள்ள உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கி நல்கதியை அருளும் நல் ஞானாசிரியனாக அவர் வீற்றிருக்கிறார். இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்திலும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக் கூடிய மூர்த்தியே இலகுளேஸ்வர மூர்த்தியாகும்.
இவரை தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் சிவக்கொழுந்தீசர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இவ்வடிவைப் பற்றி காஞ்சி புராணம் விரிவாக கூறுகிறது.