பரசிவத்தின் அருளால் பிரளய காலம் முடிந்து சர்வ சிருஷ்டி ஆரம்பித்தது. அப்போது பிரம்மத்திலிருந்து பிரகிருதி எனப்படும் மாயாதேவியும் அவள் தோன்றிய அதே நேரத்தில் பிரம்மத்தினிடமிருந்து மாயபுருஷனும் தோன்றினார்கள். மாயாதேவியும் மாய புருஷனும் ஒன்று சேர்ந்து தாங்கள் இருவரும் தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் என்னவென்று ஆலோசித்து கொண்டிருந்ததார்கள். அப்போது உங்கள் சந்தேகத்துக்கான விளக்கம் தெரிய வேண்டுமானால் தவம் செய்யுங்கள் என்று ஓர் அசரீரி கேட்டது. அசரீரி வாக்குப்படி இருவரும் கடுமையான தவம் மேற்கொண்டார்கள். வெகு காலம் சென்றது. ஒரு நாள் மாயாதேவியும் மாய புருஷனும் தங்கள் யோக நிஷ்டையிலிருந்து விழித்துக் கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் தவம் செய்திருப்பதை எண்ணினார்கள். அப்போது அவர்கள் தேகத்திலிருந்து நீர் பெருக்கெடுத்தது. அந்த நீர் பெருக்கு சகல லோகங்களிலும் வியாபித்து எங்கும் ஒரே நீராக நிறைந்து நின்றது. மிகவும் களைப்பில் இருந்த மாயா புருஷன் மாயாதேவியோடு சேர்ந்து அனேக காலம் நீரிலே நித்திரை செய்தார்கள். அப்போது முதல் மாயாபுருஷனுக்கு நாராயணன் என்றும் மாயாதேவிக்கு நாராயணி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்கள் நீரில் இருந்த இடமே திருப்பாற்கடல் என்று பெயர் பெற்றது.
நாராயணனின் நாபியிலிருந்து அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. எண்ணற்ற இதழ்களோடு கூடியதும் அனேக யோசனை அகலமும் உயரமும் உடையதாயும் நறுமணத்தோடு கூடியதுமான அம்மலரிலிருந்து நான்முகன் அவதரித்தார். மாயை காரணமாகப் பிரம்மதேவனுக்குத் தாம் யார் என்பதும் எங்கிருந்து வந்தோம் என்பதும் என்ன காரியத்துக்காகத் தாம் தோன்றியுள்ளோம் என்பதும் விளங்கவில்லை. எப்படியும் தம்மைத் தோற்றுவித்தவர் யார் என்பதைக் கண்டு கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவர் தாமரை மலரின் அடிப்பாகத்திற்குக் காம்பின் வழியாக இறங்கத் தொடங்கினார். கீழே இறங்கிச் செல்லச் செல்ல முடிவே இல்லாது பயணம் நீண்டது. எத்தனையோ வருட காலம் சென்றது. பிரம்மதேவன் இன்னமும் கீழே இறங்கிச் சென்று கொண்டிருந்தார். அவருக்குக் களைப்பு மேலிட்டது. கீழே செல்வதை நிறுத்தி விட்டு மேல் புறமாக ஏறத் தொடங்கினார். அங்கும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. இதழ்களுக்கிடையில் சுற்றிச் சுற்றி வந்தது தான் மிச்சம். யாரையும் காணவில்லை. அவர் மிகவும் சோர்வடைந்து மூர்ச்சையாகி விழுந்தார். அப்போது தவம் செய்தாயானால் நீ விரும்பும் காரியம் பூர்த்தியாகும் என்று ஓர் அசரீரி எழுந்தது. பிரம்மதேவன் பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்தார். அப்போது தான் யார் என்றும் படைக்கும் தொழிலுக்காக சிருஷ்டிக்கப்பட்டோம் என்றும் அவருக்கு புரிந்தது.
அப்போது சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் நாராயணன் அவருக்குக் காட்சி தந்தார். அவரைப் பார்த்ததும் நான்முகனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நாராயணனைப் பார்த்து நீ யார்? என்று கேட்டார். அவரோ நான் உனது தந்தை என்றார். நானே படைக்கும் தொழிலை செய்பவன் நான் படைக்காமல் நீ எப்படி வருவாய் என்று கேள்வி கேட்டார். இதனால் யார் பெரியவர் என்று இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரசிவம் ஜோதி ரூபமாக அடிமுடி காண முடியாதபடி தோன்றி நின்றார். தங்கள் இருவரைத் தவிர புதிதாக ஒரு ஜோதி தோன்றியிருக்கிறது. யார் இது என்று சிந்தித்தார்கள். அப்போது ஜோதியிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும் முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட கிளம்பினார். நாராயணன் வராகமாக மாறி அடியைத் தேட கிளம்பினார். இருவராலும் அடிமுடியைக் காணவில்லை. இருவரும் சரணம் என்று ஜோதியாய் நின்ற பரசிவனை சரணடைந்து பூஜித்தார்கள். அவர்கள் இருவரும் வணங்கி பூஜித்த உருவமே லிங்கோத்பவர் ஆகும். வானுக்கும் பூமிக்குமாக அடிமுடி காண முடியாமல் நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும்.