மகா சதாசிவ மூர்த்தி கயிலையில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும் ஐம்பது கைகளுடன் 75 கண்களுடன் இருப்பார். மகா என்றால் அளவற்ற என்று பொருள். சதாசிவ என்றால் எப்போதும் அன்பானவர் அருளானவர் பேரின்பமானவர் என்று பொருள். மகா சதாசிவமூர்த்தி என்றால் அளவற்ற அருளாளனும் அன்பாளனும் பேரின்ப வடிவமானவர் என்று பொருள். இவரைச் சுற்றி இருபத்தி ஐந்து மூர்த்திகள் இருப்பார்கள். ருத்ரர்களும் சித்தர்களும் முனிவர்களும் வணங்கக் கூடியவராக இருக்கிறார். மகா சதாசிவமூர்த்தி கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவர் அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன.
இந்த மகாசதாசிவ மூர்த்தியின் வடிவம் சிவபெருமானின் மற்ற வடிவங்களைப் போல கோவில்களில் சிலை வடிவாக இருப்பதில்லை. பெரும்பாலும் இவை கோவில் கோபுரங்களில் சுதை வடிவில்தான் காணப்படும். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிதம்பரம் நடராஜர் ஆலயம் வைத்தீஸ்வரன் கோவில் காஞ்சிபுரம் கரகரேஸ்வர் கோவில்களில் இந்த சிற்பத்தை சுதை வடிவில் தரிசிக்க முடியும்.