அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து மந்திர மலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். மந்திர மலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விஷம் தேவர்களையும் அசுரர்களையும் துரத்தியது. எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். விஷத்தைக் கண்டு பயம் கொண்ட அனைவரும் சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்கு சென்றார்கள். கைலாயத்தினை வலம் வருகையில் எதிராக வந்து அந்த விஷம் விரட்டியது. மறு திசையில் சென்றார்கள். இவ்வாறான வலம் வரும் முறை சோம சூக்தப் பிரதட்சணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த விஷத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தேவர்களும் அரக்கர்களும் இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.
சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க ஆலகால விஷத்தை உண்டார். அவருடைய கழுத்துக்கு கீழே விஷம் இறங்காமல் இருக்க பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி நீலகண்டமாக உருவாகியது. அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை. எனினும் ஒரு திருவிளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கி மயங்குவது போல் உமா தேவியின் மடியில் மௌனமாய் படுத்தார். இதனைக் கண்ட தேவர்கள் அன்று முழுவதும் உறக்கம் உணவின்றி அவரை அர்ச்சித்து இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறு நாள் துவாதசியில் தேவர்கள் பாராயணம் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவபெருமான் சூலம் உடுக்கை சகிதம் ஒரு சாம காலம் சந்தியா தாண்டவம் திருநடனம் ஆடினார். இவ்வடிவம் சந்த்யான்ருத்த மூர்த்தி எனப்படுகிறது.
திருநடனம் ஆடிய காலம் பிரதோஷ காலமாகும். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை வரும் திரயோதசியை மாத பிரதோஷம் காலமாகும். வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா சிவராத்திரி வருடப் பிரதோஷ காலமாகும்.