ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப் பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. அதன் பலனாக அந்த எலிக்கு மூன்று லோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான். அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி என்ற மன்னனாக அசுர குலத்தில் பிறந்தான். மகாபலி அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும் யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான். மகாபலியின் தவப் பயனால் அசுர குலத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் வெற்றி பெறவே தேவர்கள் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். அந்த நேரம் திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்டாள். அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்துப் பிறந்தார் திருமால். மகாபலி மிகப்பெரிய யாகம் ஒன்றை செய்தான். யாகத்தின் போது செய்யப்படும் தானத்தின் போது வாமன அவதாரத்தில் இருந்த திருமால் யாகம் நடைபெறும் இடத்திற்கு சென்று மூன்றடி மண் கேட்டார். இதனைக் கண்ட அசுர குலத்தின் குருவான சுக்ராச்சாரியார் மகாபலியிடம் சென்று வந்திருப்பது திருமால் எனவே தானம் தர ஒப்புக் கொள்ள வேண்டாம் என தடுத்தார். இறைவனுக்காக செய்யப்படும் மிகப்பெரிய யாகத்தின் போது யார் என்ன தானம் கேட்டாலும் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அரசனான நான் வாக்கு தவற மாட்டேன் என்று சுக்ராச்சாரியார் சொல்லை கேட்காமல் மூன்றடி மண் தானமாக தர ஒப்புக் கொண்டார் மகாபலி.
திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து ஓரடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் மேலோகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று திருமால் கூற மகாபலி தன் தலை மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி மகாபலியின் தலை மீது வாமனன் தன் திருவடியை வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான். தான் திருமாலின் அவதாரம் என்ற எண்ணம் மறைந்து தான் வாமனன் சிறு வயதிலேயே அசுரனை அழித்து விட்டேன் என்று வாமனனுக்கு கர்வம் வந்தது. சிவபெருமான் வாமனரை அமைதி கொள்ள வேண்டினார். ஆனால் கர்வம் அடங்காத வாமனனின் கர்வத்தை அடக்க சிவபெருமான் தன் திருக்கையில் உள்ள வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார். வாமனன் நிலம் வீழ்ந்தார். வாமன அவதாரத்தில் இருந்த உடம்பின் தோலை உறித்து மேல் ஆடையாக்கி முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார். கர்வம் அடங்கியதும் தான் அவதாரம் என்பதை உணர்ந்த திருமால் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வைகுண்டம் சென்றார்.
கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளமூர்த்தி சீர்காழியில் கோயிலில் சட்டைநாதர் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலை நாயகியாகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும்.