முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும்? என்றுக் கேட்டார். அதற்கு திருமால் தேவர்களும் அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டுமென்றார். சிவபெருமான் திருமாலை மாயன் என அழைத்து கேட்ட வரங்களைத் தந்து நீயே என் இடபுறமாக இருக்கும் அருள் சக்தியாக இருப்பாய் என்று அருளினார். அத்தகைய வரம் பெற்ற திருமால் அருள் சக்தியாக சிவனின் இடப்பாகம் இருக்கும் உருவமே கேசவார்த்த மூர்த்தி ஆவார். இவருக்கு சங்கர நாராயணன் அரிசுரர் அளிஅர்த்தர் என்ற பெயர்களும் உண்டு. சிவந்த நிறமுடைய சிவபெருமானும் நீல நிறமுடைய திருமாலும் இணைந்த வடிவம் சங்கர நாராயணன் வடிவமாகும். சக்தியின் ஆண் வடிவே திருமால் ஆகும். வெருவரு கடுந்திறல் என்ற அகநானூற்றுப் பாடலில் இவ்வடிவத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. இவ்வடிவத்திற்கு ஒரு முகமும் நான்கு கைகளும் உண்டு. வலப்பக்கம் சிவபெருமானும் இடப்பக்கம் திருமாலும் அமைந்திருக்கும் இந்த உருவத்தில் சிவனது முகம் உக்கிரமானதாகவும் அரை நெற்றி கண்ணை உடையதாகவும் விளங்குகிறது. வலது கரங்களில் மழுவும் காத்தல் குறியீடும் காணப்படுகிறது. இடப்பக்கத்தில் இருக்கும் திருமால் முகம் சாந்தமாக இருக்கிறது. இடது பக்க கரங்களில் சங்கும் சக்கரமும் இருக்கிறது. சில திருவுருவங்களில் கதையும் கடகக் குறீயீடும் உள்ளது. வலது முன்காலில் பாம்பு வடிவில் ஆன தண்டையும் இடது முன் காலில் நவரத்தினங்களால் ஆன தண்டையும் உள்ளது. அருகில் நந்தியும் இருக்கிறார்.
மகாகவி காளிதாசர் இந்த உருவத்தைப்பற்றி குறிப்பிடும் போது சக்தி ஒன்று என்றும் பரமேஸ்வரன் அருளால் அந்த சக்தி தேவைக்கேற்ப நான்காகப் பரிணமிக்கிறது. போக சக்தியாக இருக்கும் போது பவானியாகவும் ஆடவ சக்தியாக இருக்கும் போது திருமாலாகவும் குரோத சக்தியாகும் போது காளியாகவும் போர் சக்தியாக இருக்கும் போது துர்கையாகவும் செயலாற்றுகிறது என்று கூறுகிறார். இத்திருவுருவ சிறப்பை பொய்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சிறப்பித்து பாடியுள்ளார்கள். அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே என்று திருநாவுக்கரசர் சிறப்பித்து பாடுகிறார். சிவனும் திருமாலும் வேறு வேறல்ல. ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் அறிவே மண்ணு என்ற பழமோழி ஆதிகாலத்தில் இருந்தே இருக்கிறது. பின்னாளில் அறிவே மண்ணு என்ற சொல் வாயிலே மண் என்று மருவியது.
ஒரு முறை உமாதேவியார் சிவபெருமானை நோக்கி சிறப்பான சோமவார விரதம் மேற்கொண்டார். பின் விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும் அவரருகே திருமாலும் பெண்ணுருவில் வந்து சோமவார விரதத்தில் இருந்த உமாதேவியருக்கு இருவரும் சுயரூபம் காட்டினர்கள். சங்கர நாராயணனாக காட்சி கொடுத்த இடம் சங்கரன் கோயிலாகும். இது திருநெல்வேலியில் உள்ளது. இங்கு ஆடித் திருவிழாவில் தவக்கோலத்தில் அம்பிகை காட்சி கொடுக்க பின் இரவில் உமாதேவிக்கு சங்கரநாராயணர் காட்சி கொடுப்பார். இங்கே சங்கர நாராயணருடைய சன்னதி சிவனது சந்நிதிக்கும் அம்பிகையின் சன்னதிக்கும் இடையில் சன்னதி அமைந்துள்ளது. இதுபோல சங்கரநாராயணன் சந்நிதி கர்நாடக மாநிலத்தில் ஹரிகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் சுகாசுரன் என்று அரக்கன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து தன்னை அழிக்க முடியாத வரத்தை பெற்றான். பின் அவனது கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைய சிவபெருமான் சங்கரநாராயணனாக அவதாரம் எடுத்து அவனை அழைத்தார். இதனால் அந்த ஊருக்கு ஹரிஹர் என்று பெயர் ஏற்பட்டது. சென்னகேசவர் கோயில் பேளூர். மீனாட்சியம்மன் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த இந்தியத் திருத்தலங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பங்கள் உண்டு.
சங்கரநாராயணன் திருக்கோலத்தை சிவாகமங்கள் போற்றி புகழ்கின்றன. பல்லவர்கள் தம் அமைத்த குடைவரை கோவில்கள் பலவற்றில் சங்கரநாராயணன் திருஉருவத்தை அமைத்துள்ளார்கள். சோழர் காலத்தில் சங்கரநாராயணர் கோட்ட தெய்வமாக போற்றப்பட்டார். தஞ்சையில் சங்கரநாராயணனுக்கு தனி கோவில் உள்ளது. வட இந்தியாவில் உள்ள பஞ்ச தீர்த்தம் என்னும் இடத்தில் உள்ள புவனேஷ்வர் லிங்கத்தின் வலப்பகுதி சிவனின் கூறவும் இடப்பகுதி திருமாலின் கூறவும் உள்ளது. இந்த திருவுருவத்தைப் பற்றி வாமனபுராணம் இலிங்கபுராணம் முதலான பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. திருமால் சிவனின் இடப்பாகம் அருள் சக்தியாக பெண் உருவில் இருந்தபடியால்தான் பத்மாசூரன் வதத்திலும் பாற்கடல் கடைந்த போதும் தாருகாவன முனிவரின் செருக்கை அடக்கிய போதும் மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானின் தேவியாகத் தோன்ற முடிந்தது.