பாண்டிய மன்னன் குதிரைக்காக மாணிக்கவாசகரை துன்புறுத்த மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றார் இறைவன். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு மாணிக்க வாசகரை மேலும் துன்புறுத்தினான். மீண்டும் மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைய சிவபெருமானின் திருவிளையாடலால் பாண்டிய மன்னன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.
மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தியாகும். திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் இந்த மூர்த்தியின் சிற்பம் உள்ளது.

