தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்து இருந்தார்கள். தங்களின் வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைய வேண்டும். அதனைக் கடைவதற்கு கூட தங்களிடம் வலிமை இல்லாததால் அசுரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தார்கள். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும் வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திர மலையின் அடியை தாங்கினார். பாற்கடலை கடைய கடைய பல பொருட்கள் வந்தது. அப்பொருட்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக் கொண்டார்கள். ஆலகால விஷத்திற்கு பின் இறுதியாக அமிர்தம் கிடைத்தது.
அமிர்தத்தை அசுரர்கள் பெற்றால் உலகிற்கு மேலும் தீமைகள் நடைபெறும் என்று எண்ணிய திருமால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தத்தை குடித்தார்கள். இதனை அறிந்த திருமால் கையில் இருந்த அகப்பையால் அவர்களது தலையை வெட்டி அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல் சிவபூஜை செய்து ராகு கேது கிரகங்களாக உருமாறினார்கள். இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற திருமாலின் அவதாரமான ஆமை ஏழு கடல்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் அனைத்து கடல் நீரையும் குடித்த ஆமை கண்ணில் கண்ட அனைத்தையும் உண்டது. இதனால் உலக மாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர்கள். ஆமையை அழிக்குமாறு கூறினார்கள். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் ஆமையின் உடலைக் குத்தி ஆமையின் வலிமையை குறைந்து அதன் ஓட்டை தன் திருமார்பில் ஆபரணமாக அணிந்து கொண்டார். நடந்தவற்றிற்கு திருமால் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தனது திருபாற்கடலுக்கு சென்றார். திருமாலின் ஒரு அவதாரமாகிய ஆமையின் உருவத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.
சென்னையில் பாரிமுனைக்கு அருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது ஓவியம் காணப்படுகின்றது. சிவலிங்கம் ஆமையின் மீது இருப்பதைக் காணலாம். கந்த புராணமும் காஞ்சி புராணமும் இந்த வரலாற்றை சிறப்பாக சொல்கிறது.