மகாபாரத யுத்தத்தின் போது பாண்டவர்களின் படையும் கௌரவர்களது படையும் கடுமையாக மோதிக் கொண்டது. 13 ஆம் நாள் யுத்தம் நடைபெற்ற போது துரோணாச்சாரியாரால் பத்ம வியூகம் அமைக்கப்பட்டது. அதனுள் தர்மரின் கட்டளையை ஏற்று அர்ஜுனனின் மகனான அபிமன்யு உள்ளே சென்று கடுமையாக போராடினான். தர்மனின் படை பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று அபிமன்யுவுக்கு உதவ சென்றபோது ஜயந்திரன் என்பவன் தனது படைகளோடு வந்து தருமரை பத்ம வியூகத்தில் செல்லாதவாறு தடுத்தான். அபிமன்யுவினால் பத்ம வியூகத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. பெரும் போர் செய்த அபிமன்யு ஜயந்திரன் கொன்று விட்டான். அதனால் மிக கோபம் கொண்ட அர்ஜுனன் அடுத்த நாள் பொழுது சாயும் முன் ஜயந்திரனை கொல்வேன். கொல்ல முடியாவிட்டால் தீமூட்டி அதனுள் பாய்ந்து உயிரை விடுவேன் என சபதமிட்டான். பின் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருந்தான். அப்போது கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ஜூனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அதற்கு அர்ஜூனன் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ண மாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ஜூனனும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான். அர்ஜூனனா ஜயந்திரனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விடலாம் வா என்று அழைத்தான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ஜூனன் கண்ணனை சிவனாக பாவித்து அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ஜூனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் எதிரியை அழிக்க வல்ல பாசுபதஸ்திரத்தை கொடுத்தார். இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.
சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ஜூனன் இவ்வாறு கனவு கண்டான். கண் விழித்துப் பார்க்கும் போது தன்னுடைய அம்பறாத் தூணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதஸ்திரத்திரம் இருப்பதைக் கண்ட அர்ஜூனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும் கண்ணனையும் வணங்கினான். அர்ஜூனனும் சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் கண்ணனின் வழிகாட்டுதலின் படி ஜயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான். கண்ணனும் அர்ஜூனனும் வேண்டிய வண்ணம் பாசுபதஸ்திரத்தை அருளிய நிலையிலுள்ள உருவமே பாசுபத மூர்த்தியாகும்.