சதாசிவமூர்த்தி தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவன் வடிவமாகும். தூய ஸ்படிக நிறத்துடன் சடாமுடியுடன் ஐந்து திருமுகங்களும் பத்துக் கரங்களும் நெற்றிக்கண் உட்பட பதினைந்து திருக்கண்களுடன் காட்சியருளும் சதாசிவனைத் தியானிக்குமாறு ஆகமங்கள் கூறுகின்றன. உத்தர காமிகத்தின் படி வலக்கையில் சூலமும் மழுவும் கட்வாங்கமும் வச்சிரமும் அபயமுத்திரையும் கொண்டும் இடக்கையில் நாகம் மதுலிங்கப்பழம் நீலோற்பலம் உடுக்கை மணிமாலை கொண்டும் காட்சியளிக்கிறார். சதாசிவமூர்த்தி ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் தோன்றுகிறார். இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர்.
- ஈசானம் முகம் ஸ்படிக நிறத்தில் மேலே மேல் நோக்கியபடி உள்ளது.
- தத்புருடம் வெண்மை கலந்த மஞ்சள் கிழக்கு நோக்கியபடி உள்ளது.
- அகோரம் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் தெற்கு நோக்கியபடி உள்ளது.
- வாமதேவர் காவி நிறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது.
- சத்யோஜாதம் சந்திரனின் கதிர்களைப் போன்ற நிறத்துடன் மேற்கு நோக்கியபடி உள்ளது.
தியான பூஜைக்காக சகளத் திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப் பாகத்தில் சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே பிரமனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரண கர்த்தாவாவார்.
சதாசிவ மூர்த்தி ஐந்து முகங்கள் பத்து திருக்கரங்கள் பதினைந்து கண்கள் கொண்டு தாமரைப் பீடத்தில் நிற்கும் திருமேனியர் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் போற்றுகிறார்.
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே. பாடல் 1730
சதாசிவமூர்த்தி உயிர்கள் உய்ய வேண்டி தனது ஐந்து முகங்கள் வழியாக ஐந்து தொழில்களைப் புரிகிறார். இவை படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் மற்றும் அருளை ஆகிய ஐந்து தொழில்கள் ஆகும். 1. சத்யோஜாதம் முகம் படைக்கும் சக்தியாகும். 2. அகோரம் அழிக்கும் சக்தியாகும். 3. தத்புருஷம் மறைக்கும் சக்தியாகும். 5. ஈசானம் அருளும் சக்தியாகும். வேதங்களும் ஆகமங்களும் சதாசிவனின் ஐந்து முகங்களால் வெளிப்படுகின்றன. இந்த ஐந்து முகங்களும் ஐந்து மந்திரங்களைக் கொண்டது என்றும் இந்த ஐந்து மந்திரமே சதாசிவனின் உடல் என்றும் மிருகேந்திரஆகமம் கூறுகிறது.
சதாசிவமூர்த்தி தனது சத்யோகஜாதம் முகத்திலிருந்து காமிகம் யோகசம் சிந்தியம் காரணம் அசிதம் ஆகிய ஐந்து ஆகமங்களை அருளினார். வாமதேவ முகத்திலிருந்து தீப்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்ற ஆகமங்களை அருளினார். அகோரம் முகத்திலிருந்து விசயம் நீச்சுவாசம் சுவயம்புவம் ஆக்நேயம் வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். தத்புருடம் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம் இலளிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பரமேச்சுவரம் கிரணம் வாதுளம் எனும் எட்டு ஆகமங்கள் என மொத்தம் 28 ஆகமங்களை சதாசிவமூர்த்தி உபதேசித்தார்.
சிதம்பரம் கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும் மேலைக் கோபுரத்தின் முதல் நிலையின் மேற்புறத்தில் வலப் பக்கமும் கிழக்கு கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும் 2 ஆம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும் சந்நிதி நுழை வாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
காஞ்சிபுரம் கரகரேசுவர்ர் கோயிலின் விமானத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
வைத்தீசுவரன் கோயில் கோபுரத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 2 ஆம் கோபுரத்தில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
எலிபெண்டா குகையில் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
சதாசிவ மூர்த்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ராஜராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விமானத்தின் பல நிலைகளிலும் சதாசிவ மூர்த்தி சிலைகளை அமைத்து வைத்திருக்கிறான். மேலும் சதாசிவத் தத்துவத்தை விளக்கும் பஞ்ச தேக மூர்த்தி என்ற பஞ்சலோகத் திருமேனியையும் இந்தக் கோயிலில் அமைத்து வழிபட்டான். இதன் வடிவமைப்பு அளவு எடை ஆபரணங்கள் ஆகிய செய்திகளைக் கூறும் கல்வெட்டையும் இங்கு பொறித்து வைத்துள்ளான். ஆனால் தற்போது இந்த வடிவம் இங்கு இல்லை.
தஞ்சாவூர் ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு திருமுகங்களுடன் உச்சியில் ஈசான முகம் சேர்த்து ஐந்து திருமுகங்கள் மற்றும் பத்து திருக்கரங்களுடன் வீராசன கோலத்தில் திகழும் சதாசிவமூர்த்தியின் வடிவம் உள்ளது.
சென்னை அருங்காட் சியகத்தில் சதாசிவமூர்த்தியின் செப்புத் திருமேனி உள்ளது.