சிவபெருமான் தட்சிணாமூர்த்தி என்ற வடிவத்தில் குருவாக வந்து அனைவருக்கும் அருள் செய்தார். அப்போது யாழிசை இசைப்பவரான நாரதரும் சுக்ர முனிவரும் தும்புரு முனிவரும் தாங்கள் இசை ஞானத்தை உணர சாம வேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப் பாடி தங்களுக்கு அருள் புரிய வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையைப் பற்றியும் வீணையின் இசைக் கலையைப் பற்றியும் கூறினார். எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்ன பலன் என்றும் எந்த மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக் குற்றம் ஏற்படும் என்றும் விளக்கிக் கூறினார்.
கொன்றை கருங்காலி மரங்களில் வீணை செய்ய வேண்டும். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட பேரியாழ் மகரயாழ் சகோடயாழ் செங்கோட்டியாழ் என்ற நான்கு வகை வீணைகளையும் செய்யலாம். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும் மகரயாழுக்கு 17 நரம்பும் சகோடயாழுக்கு 16 நரம்பும் செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்க வேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல் பரிவட்டனை ஆராய்தல் தைவரல் செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசை எழுப்ப வேண்டும். முக்கியமாக வீணையுடன் பாடும் போது உடல் குற்றம் இல்லாமலும் பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும்.
இவ்வாறாக வீணையைப் பற்றியும் இசையைப் பற்றியும் வீணையை வைத்து பாடும் பாடல்களைப் பற்றியும் அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக் காட்டினார் குருவாக வந்தருளிய தட்சணாமூர்த்தி. இதனைக் கண்டு கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். நாரதர் சுக்ர முனிவர் தும்புரு முனிவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீணையுடன் காட்சி தருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.
காமிக ஆகமத்தின் படி இத்திருவுருவம் வீணையை வாசிப்பதற்காக இவர் இடது கரத்தை உயர்த்தி வலது கரத்தை தாழ்த்திக் வைத்துக் கொண்டு வீணையின் தலைப் பகுதியை இடது கையினாலும் கீழ்ப்பகுதியை வலது கையினாலும் பிடித்திருக்கிறார். வீணையில் ஒலி எழுப்பும் பகுதி இவரது வலது தொடையின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. பின் வலக்கரம் வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறது. முகம் சந்தர்சண முத்திரையுடைய கையை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவரை சூற்றிலும் முனிவர்களும் சித்தர்களும் பூதங்களும் விலங்குகளும் தேவர்களும் அமர்ந்திருப்பார்கள். புலித்தோலின் மீது அமர்ந்தும் நின்றும் காட்சியளிப்பார். சில கோயில்களில் உள்ள திருவுருவங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அச்சுமத்பேத ஆகத்தின் படி இவரது இடது பாதம் உத்குடியாசன அமைப்பில் இருக்கும். வலது பாதம் தொங்கிக் கொண்டிருக்கும். இவரது காலடியில் முயலகன் இருப்பார். இவ் வடிவத்தில் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் காட்சி அளிக்கிறார். முன் இரு கரங்களும் வீணையை பற்றிப் பிடித்திருக்கும். பின்னால் உள்ள வலது கரம் ருத்ராட்ச மாலையையும் பின்னால் உள்ள இடது கரம் தீயை அல்லது நாகத்தை ஏந்தி இருக்கும். சடாபாரம் சடாபந்தம் சடா மண்டலம் சடாமகுடம் அல்லது பட்டபந்தத்தால் கட்டப்பட்ட சடைகளை உடையவராக இருப்பார். சடையில் கங்காதேவியின் புன்னகையுடைய முகம் இருக்கும். இவரது இடது காதில் சங்க பத்திரமும் வலது காதில் குண்டலமும் காணப்படும். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வெண்மையான ஆடைகளுடன் புலித்தோலை அணிந்து பலவகைப்பட்ட ஆபரணங்களையும் அணிந்து புன்சிரிப்புடன் இருப்பார்.
பல சிவாலயங்களில் வீணை ஏந்திய திருவுருங்கள் வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு தோற்றங்களிலும் காணப்படுகிறது. திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியிலும் துடையூரிலும் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.