சூரபத்மன் பெரும் வலிமை உடைய கூடிய அரக்கன். அவன் தேவலோகத்தை தாக்கி இந்திரனை வெற்றி கொண்டு தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்தான். சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே அசுரர்களின் கொடுமைத் தாங்காத தேவர்கள் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கயிலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவளை இழுத்துக் கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப் படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இதனை அறிந்த சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் ஐயப்பனை பழிவாங்கப் புறப்பட்டான். பானுகோபன் இந்திராணியையும் இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டான். அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். பானுகோபன் அவர்களது ஐராவதத்தை சிறை பிடித்தான்.
ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. ஐராவதத்தின் தந்தம் உடைய அதுவும் பின் வாங்கியது. மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று மூன்று காலமும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சி கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த தந்தங்களை புதுப்பித்து பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப் பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது. ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி சிவபெருமான் காட்சிக் கொடுத்து வரம் கொடுத்த வடிவமே கஜாந்திக மூர்த்தி ஆகும்.