அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோவில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. இக்கோவில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம். 29 தூண் இடைவெளிகள் இல்லாமல் மூடிய மண்டபமாக உள்ளது 9 தூண் இடைவெளிகளுடன் உள்ளது. இச்சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது.
இக்கோவில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. தென் புறச் சுவரில் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும் 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.
மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் தேவகி ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார். உக்கிரசேனரின் மகன் கம்சன். கம்சன் தன் ஒன்று விட்ட தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் தேவகி வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குக் குழந்தை பிறக்கும் சமயம் ஒரு கழுதையைச் சிறை வாயிலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்ல. கழுதையை நம்பினான் கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்தத் துவங்கி விடும். கம்சன் வந்து குழந்தையைக் கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரிக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவர் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து வேண்டினார் .கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரமும் நிகழ்ந்தது. எனவே தான் காரியம் ஆகவேண்டுமா கழுதையானாலும் அதன் காலைப் பிடி என்ற பழமொழியும் வழக்கத்தில் வந்தது. இக்கோவிலின் வெளிச்சுவற்றில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.