விழுப்புரம் மாவட்டம் கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். மூலவர் அர்த்தநாரீஸ்வரர். அம்பாள் முத்தாம்பிகை. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். இப்பகுதியில் அகத்தியர் பூஜையில் இருக்கும் போது இறைவனின் திருமணக்காட்சியை காண விரும்பி சிவனை வேண்ட சிவன் திருமணக்காட்சியை தந்தருளினார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே இங்கு சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலித்தார்.
விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக காடுகளை விவசாய நிலமாக மாற்ற நிலத்தை வெட்டும் போது சிவலிங்கம் தோன்றியது. இவரே அர்த்தநாரீஸ்வரர். மண்வெட்டியில் வெட்டுப்பட்ட கீறலை தழும்பாக இப்போதும் சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இந்த சிவலிங்கம் துவாபரயுகத்தில் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் ராமர், அகத்தியர், குகை நமச்சிவாயர் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. ரிஷிகள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது. குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்பாளிடம் தாயிருக்க பிள்ளை சோறு என்ற செய்யுளை பாடினார். உடனே அம்பாள் அவர் முன் தோன்றி நான் இங்கு ஈசனுடன் பாதிபாகமாக இடம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே மின்னும்படிவந்த சோறு கொண்டு வா என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குருநமச்சிவாயரின் பசியாற்றினாள்.
தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்கு 108 பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அத்தலத்தில் இருந்த அம்பாளை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்பாள் இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும் இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்பாளும் சிவனும் தோற்றமளிக்கின்றனர். இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் தேன் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் தினசரி நடக்கும் தேனாபிஷேகத்தில் அம்பாளின் உருவம் தெரியும். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.