தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர் சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். வைஷ்ண சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுகிறது. நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர் மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். தங்கமும் வெள்ளியும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக மிகப்பெரிய சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலங்கள் கழிந்தன. மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ் தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.
இந்த சாளக்ராமத்தைக் கொண்டு அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்து அழகிய கோயிலும் எழுப்பி அந்தக் கோயிலுக்கு நிலங்களும் பசுக்களும் தானமாக அளித்தார் மன்னர் பிரதாப்சிங். சௌந்தர்யமாக அழகு ததும்ப காட்சி தருவதினால் அவர் குடிகொண்டிருக்கும் கருவறையின் விமானம் செளந்தர்ய விமானம் என்று பெயர் பெற்றது. கோதண்டராமர் ஐந்தடி உயரம் சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலத்தில் லட்சுமணர் சீதாதேவி ஆகியோருடன் சுக்ரீவன் உடனிருக்க சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கி.பி.1739-1763 ல் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.