உத்தரகண்ட் டெஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியிலிருந்து 75 கி.மீ தூரத்திலும் சக்ரதாவிலிருந்து 68 கி.மீ தூரத்தில் லகா மண்டல் சிவாலயம் அமைத்துள்ளது. இந்த கோயில் வளாகம் தேசிய முக்கியத்துவச் சின்னமாக உள்ளது. இந்த கோயில் அழகிய மலைகள் மற்றும் யமுனா நதியால் சூழப்பட்டுள்ளது. லகா மண்டல் அதன் பெயரை இரண்டு சொற்களிலிருந்து பெறுகிறது. லகா என்பது பல என்னும் பொருளையும் மண்டல் என்பது கோயில்களையம் குறிக்கும். 6 ம் நூற்றாண்டின் கல்வெட்டின் படி லகா மண்டலில் உள்ள சிவன் கோயில் சிங்புராவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. ஜலந்திர மன்னரின் மகனும் தனது மறைந்த கணவர் சந்திரகுப்தரின் ஆன்மீக நலனுக்காக இது இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. நாகரா பாணியில் தற்போதைய கட்டமைப்பு 12 – 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புராணத்தின் படி லகா மண்டல் பாண்டவர்களை துரியோதன் மெழுகினால் ஆன அரக்கு மாளிகையில் தங்க வைத்து எரிக்க முயன்ற இடம். அதிர்ஷ்டவசமாக பாண்டவர்கள் ஒரு குகை வழியாக ஓடி அங்கிருந்து தப்பினர். லகா மண்டல் கோவிலில் இருந்து குகையின் முனையை கோவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் காணலாம். இந்த இடம் துந்தி ஓடாரி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சிவலிங்கம் கிராபைட் கல்லால் ஆனவர். தண்ணீர் ஊற்றப்படும்போது அது பிரகாசித்து அதன் சுற்றுப்புறங்களிலும் பிரதிபலிக்கிறது. கோவில் வளாகத்தின் உள்ளே ஒரு பாறையில் பார்வதியின் கால் அடையாளங்களைக் காணலாம். சிவன், பார்வதி, கார்த்திகேயா, விநாயகர், விஷ்ணு மற்றும் பஜ்ரங்பாலி சிலைகள் உள்ளன.
இந்த பகுதி பழங்கால கோவில்கள் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிறைந்துள்ளது. பல சிலைகள் மற்றும் லிங்கங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. தற்போது வரை 150 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 4 -5 ம் நூற்றாண்டு கல்வெட்டுகளாகும்.
கிராபைட் பற்றிய சில செய்திகள் நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். கிராபோ என்ற சொல்லுக்கு நான் எழுதுகிறேன் என்பது பொருளாகும். கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கிரீன்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையில் கிடைக்கிறது. கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது. ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது. இதனால் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது.