புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதி தம்பி நந்தி என்றும் பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நந்தீஸ்வரருக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுவார்கள். தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால் இங்கு இருக்கும் நெய்யை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. நெய்க்கு ஈ எறும்புகள் வராத இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும் மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.