பழமையான ஒரு புத்தர் கோவிலில் காளி அருள் பாலிக்கிறாள். உள்ளுர் மக்கள் தினமும் தவறாமல் அதன் முன்னேயிருக்கும் வெண்கலப் பாத்திரத்தில் நிரம்பியிருக்கும் மணலில் ஊதுவத்திகளை ஏற்றி வணங்கி வழிபடுகிறார்கள். நான்கு கைகளுடனும் அவற்றில் உடுக்கை ஆயுதம் ஏந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். காளியின் காலடியில் வேலால் தாக்கபட்ட நிலையில் ஒரு அரக்கனின் உருவமும் அருகில் இரு காவலர்களூம் நிற்கிறார்கள்.
காளியின் வடிவம் சீனாவின் மற்ற இடங்களில் வழிபடப்படும் கியூனியன் தேவியின் உருவத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும் உள்ளுர் மக்கள் கியூனியன் தேவியின் வேறு வடிவம் என்று வணங்கி வருகிறார்கள். கியூனியன் தேவி என்பவள் ஒரு ஞானம் பெற்ற போதி சத்துவரின் பெண் வடிவம் என்று நம்புகிறார்கள். போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள் மற்ற உயிர்களைச் சம்சாரத்திலிருந்து விடுவிக்க உறுதி பூண்டவர்கள். புத்தரின் நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். புத்தர் கோயிலில் உள்ள இந்த காளியை வழிபட்ட பின்பே மக்கள் புத்தரை வணங்கிச் செல்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில் ஒரு இந்துக் கோவிலை தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழர்கள் நிறுவி வழிபட்டு வந்தார்கள். அக்கோயில் காலப் போக்கில் புத்தர் கோயிலாகி விட்டது.
புத்தர் கோவிலின் நுழை வாயிலில் இருக்கும் மேடையின் பக்க வாட்டில் வரிசையாகப் பல நிலைகளைலிருக்கும் நரசிம்மரின் உருவங்களையும் இந்தக் கோவிலின் சன்னதிக்கு முன்னிருக்கும் தூண்களில் இந்து புராணக் கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் இருப்பதை சான்றாக சொல்லுகிறார் லீ சான் லாங் என்ற ஆய்வாளார். தமிழகத்திலிருந்து கப்பலில் வந்த வணிகர்கள் இந்த நகரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நகரத்தில் இந்தக் கோவில் மட்டுமில்லை சுற்று வட்டாரத்தில் பல கோவில்களையும் எழுப்பியிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் செய்யும் சீனப்பேராசியர்கள் குழு அறிவித்திருக்கிறார்கள்.