அமர்நாத் குகைக்கோவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க புனிததலம். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. புராண இதிகாசங்களின் படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன் பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்திருக்கின்றார். சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.
சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள் மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி சிவலிங்கமாக உருப்பெருகிறது. பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும் பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்று வரை ஒரு ஜோடி மலை புறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும் இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.