கழுகுமலை வெட்டுவான் கோயில்

கழுகுமலையின் பின்புறம் அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். மலையின் பழம்பெயர் அரைமலை. ஊரின் பழம்பெயர் பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையின் ஒரு பகுதியில் 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். இத்தகைய கோயில் தமிழகத்திலேயே இது ஒன்று தான் இருக்கின்றது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல் தற்போது கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் உள்ளது

சங்கரன்கோவில் கோவில்பட்டி சாலையில் இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். மலையின் நடுவே ஓரிடத்தில் வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக இங்கே சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை.

கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில் உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் உள்ளன..விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும் இவற்றுக்குக் கீழே யாளியும் உள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில் கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையில் மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.