கைலி கட்டும் அரங்கன்

ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ஜுன மண்டபம் வடகிழக்கு ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை சுல்தான்கள் புத்தகத்தில் துலுக்க நாச்சியார் பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இசுலாமிய வழக்கப்படி அகிலும் சந்தனமும் கலந்த தூபப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

மாலிக் கபூர் தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமைப் படைத்தலைவர். தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன் கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார். திருவரங்கத்தினை கொள்ளையடித்த போது டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள் அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி தன் அறையிலேயே வைத்துக் கொண்டு அந்த அரங்கனை உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.

அரங்கன் ஆக்கிரமிப்பாளர்களுடன் டில்லி செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி திருக்கரம்பனூரைச் சேர்ந்தவள். தானும் அவர்களைப் பின் தொடர்ந்து டில்லி சென்றாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை பின் சென்ற வல்லி என்று போற்றி வைணவம் பாராட்டுகிறது. அரங்கனை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் பின்சென்ற வல்லி என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அரங்கன் என்பதை அறிந்த மன்னர் அரங்கனை கொண்டு செல்ல அனுமதி தந்து அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.

இளவரசி கொடுக்க மறுக்கிறாள். இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாகயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து தன் அறையில் அரங்கனைக் காணாமல் தொலைந்தது அறிந்து பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார். அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிடுகிறாள். டில்லியில் இருந்து இளவரசி வந்திருப்பதை அறிந்த தலைமை பட்டரோடு சிலர் தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல் கோவில் மூடியிருப்பதைக் கண்டு தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள். அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து துலுக்க நாச்சியார் என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது. பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள். மதம் கடந்த அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக இருக்கும் ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். வெந்நீர் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.