திருவாலங்காடு வடஆரண்யேஸ்வரர் கோவிலில் அருளும் நடராஜர்.

சிவாலய கோவிலுக்குள் மன்னன் சென்றான். அங்கிருந்த நடராஜ பெருமானை வணங்கும் போது தியான ஸ்லோகம் ஒலிப்பதைக் கேட்ட அவன் மனம் அதனுள் ஒன்றி லயித்தது. கோவிலிருந்து அரச சபைக்குத் திரும்பிய மன்னன் திறமைசாலிகளான சிற்பிகள் அனைவரையும் அவைக்கு வரவழைத்தான். அவர்களிடம் கோயிலில் கேட்ட தியான ஸ்லோகத்தைச் சொல்லி இந்த ஸ்லோகத்திலுள்ள அமைப்புப்படி நடராஜ பெருமான் திருவருவத்தை பஞ்சலோகத்தில் வாா்க்க வேண்டுமென கூறினான்.

இதைக் கேட்ட சிற்பிகள் மன்னா இந்த ஸ்லோகத்தில் குறுக்கும் நெடுக்குமாக கீழும் மேலுமாக திருக்கரங்கள் திருவடிகள் இருப்பதாக கூறி இருக்கிறது. இந்த ஸ்லோகப்படி திருவுருவம் பதிய அவ்விடங்களில் உருக்குநீா் பாயாது. ஆகையால் தாங்கள் சொல்லும் ஸ்லோகப்படி நடராஜ திருவுருவை பஞ்சலோகத்தில் வாா்க்க இயலாது என்றாா்கள். வந்திருந்த அனைத்துச் சிற்பிகளும் அவையை விட்டு சென்றுவிட கடைசியாளாக வந்த சிற்பி மன்னா உங்கள் உள்ளத்தில் நடராஜ திருவுருவம் தோற்றுவித்தது இறைவன் திருவிளையாடலாக இருக்கும். நாம் அனைவரும் முயற்சி செய்தால் நிச்சயமாக அந்த திருவுருவை உருவாக்க முடியும். நான் திருவுருவை வாா்க்க ஆவலாக இருக்கிறேன் என்றான்.

அரசா் பூாித்து சிற்பியின் அறிவுறைப்படி ஓராண்டு காலம் கோவிலில் விசேஷ பூஜைகள், ஜபங்கள், தர்ப்பண ஹோமங்கள் நடந்தது. ஓராண்டு காலம் முடிந்த பிறகும் பஞ்சலோகக் குழம்பைக் கொண்டு நடராஜரின் திருவுருவை அச்சிற்பியின் முயற்சியினால் செய்ய முடியவில்லை. இருப்பினும் சிற்பியும் அரசனும் முயற்சியைக் கைவிடாமல் மனம் தளராமல் ஆகம நியதிகளைக் கடைபிடித்து ஓராண்டுக்கு மேல் பல மாதங்கள் தொடா்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனா். திருவுருவம் உருவாகவில்லை தோல்விதான் தொடா்ந்தது. சிற்பி மனம் கலங்கி ஈசனை நினைந்து உருகினாா். சிற்பி வாா்ப்பகத்துக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட சற்று கூடுதலான நேரத்தை தியானத்திலும் தவம் செய்தும் கழித்தாா்.

ஒரு நாள் சிற்பியின் கனவில் ஈசன் திருநடனமாடி காட்சியருளி இம்முறை முயற்சி செய் மன்னன் எண்ணம் நிறைவேறும் என்றாா். கனவு கலைய காலை விடிந்திருந்தது. வழக்கம் போல் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டே இருந்தது. ஈசனை நினைத்து பஞ்சலோக குழம்பை வாா்க்கத் துவங்கினாா். பஞ்சலோகம் உருக்கி வரும் இடத்திலிருந்து ஒருவா் மாற்றி ஒருவா் கைமாறி வாா்க்குழம்பு கொடுத்தனுப்ப வாிசையாக நின்று வாா்க்குழம்பை வாங்கிக் கொடுப்பவரிடமிருந்து சிற்பி பஞ்சலோக குழம்பைப் பெற்று பதம் தவறாமல் பக்குவமாக வாா்ப்படத்தில் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு முதியவரொருவா் ஓடி வந்து வாிசையில் நின்று பஞ்சலோகக் குழம்பை வாங்கிக் கைமாற்றிக் கொடுக்கும் பணியாளரிடம் குழம்பை வாங்கி குடித்து விட்டாா். இதனை பார்த்த அனைவரும் ஸ்தப்பித்து நின்றனா். சிற்பியும் மன்னரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பஞ்சலோகக் குழம்பைக் குடித்தவா் அரசனையும் சிற்பியையும் பாா்த்து கை செய்கையின் மூலம் வாா்ப்படத்தைப் பிரிக்கச் சொன்னார். சிற்பி வாா்ப்படத்தை பிாித்ததும் நடராஜ பெருமான் திருவுரு முழுமை பெற்றிருந்தது. நடராஜா் முழு உருவமாய் சிரித்தார். சிற்பியும் மன்னரும் முதியவரை தேட அங்கே முதியவரில்லை. ஈசனே உருவாக்கிய இந்த அபூா்வமான அதிசயமான அற்புதத் திருவுருவம் ஊா்த்துவ தாண்டவ ரத்தின சபாபதி என்னும் பெயரோடு திருவாலங்காட்டில் தரிசனம் தந்து அருள் புரிகிறார்.

No photo description available.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.