மிகப்பெரிய அனந்தசயன பெருமாள்

வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற இருந்த கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் 10 வகையான சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில்

  1. ஜல சயனம் என்னும் அனந்த சயனம்
  2. தல சயனம்
  3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
  4. உத்தியோக சயனம்
  5. வீர சயனம்
  6. போக சயனம்
  7. தர்ப்ப சயனம்
  8. பத்ர சயனம்
  9. மாணிக்க சயனம்
  10. உத்தான சயனம் என்று 10 வகைக் கோலங்களில் தரிசனம் கொடுக்கின்றார்.

ஒடிஷா மாநிலத்தில் தென்கானல் மாவட்டத்தில் பிராமணி ஆற்றங்கரையில் சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட மிகப்பெரிய வடிவில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் அருள்பாலிக்கிறார். வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன் இருகரங்களில் கதையும் தாமரை மலரும் காணப்படுகின்றன. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில் முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலக்கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். இவர் 8 முதல் 9 ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவராக இருக்கலாம் என்று ஆய்வலர்கள் கருதுகிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.