ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் மரைக்காயர் என்ற மீனவர் வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி இருந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது. ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக இருந்துள்ளது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை.
மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவரவில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல் மீது வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னி பச்சை நிறமாக காட்சியளித்தது.
மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் விவரித்து தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார். சோதித்தவர் ஆச்சரியத்துடன் இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார். இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார் என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார்.
மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் சித்தர் சண்முக வடிவேலர். மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பால் அபிஷேகத்தின் போது நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பை காணலாம். பின்னர் மன்னரை அழைத்து முதலில் மரகத நடராஜ மூர்த்தியே நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார். மன்னர்கள், முகலாயர்கள், அன்னியர்கள் என பல படையைடுப்புகளை தாண்டி இன்று உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்.