டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது தமிழகத்திலும் புகுந்து சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.
கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாக இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.