அகத்தியர் கோவில்

அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பிரதான வீதியில் அமைந்துள்ளது கோவில். கிழக்கு பார்த்த தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். கருவறையில் அகத்தியர் நின்ற கோலத்தில் வலக்கை சின்முத்திரை காட்ட இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை ஜடாமகுடம் மார்பில் பூணூல் மீசை தாடியும் அமைந்துள்ளது. இவருக்கு எதிரில் நந்தியும் பிரகாரத்தில் சண்டிகேசுவரரும் இருக்கின்றார்கள். உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியுள்ளார். நவராத்திரி விழாவின் போது 9 நாட்களும் லோபமுத்திரைக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. ஆலய முகப்பில் நந்தி கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும் மேற்கே அகத்தியர் லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன. அடுத்து நடராஜர் சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. சிவனுக்குரிய பூஜை முறைப்படியே அகத்தியருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜை நடக்கிறது.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர் பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்து விட்டு பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். அகத்தியர் அவரிடம் தான் ஒரு புளிய மரத்தடியில் காத்திருப்பதாகச் கூறினார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன் பின் சிவபக்தர் சாதமும் அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர் அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில் அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்விற்கு சான்றாக இக்கோவிலில் இன்றும் அன்னம் படைத்தல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொண்டதற்கான சான்றாக இந்த காலடித்தடம் இருக்கிறது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக அகத்தியர் விளங்கினார் என்ற செய்தி கிபி 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில் வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன் என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய மன்னருக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.