கேரள மாநிலம் மதூரில் இருக்கிறது மதனந்தேஸ்வரர் கோயில். சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் மக்கள் சித்தி விநாயகர் கோவில் என்றே அழைக்கின்றனர்.
ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் சென்றார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து லிங்கம் வந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் கூறினாள். அவர்கள் மதூர் அரசனான மயிபாடி ராமவர்மாவிடம் சொன்னார்கள். சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ராமவர்மா உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும் ஜோதிடத்தில் அறிந்த பெரியவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டார். தீவிரமாக ஆலோசித்த பின் கோவில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென வாக்குச் சொன்னார்கள். எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் எங்கு கிடைத்ததோ அங்கு அந்த பெண்மணியை வரவழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை கொடுக்கவேண்டும். அங்கிருந்து அதைத் தூரமாக தூக்கி வீசவேண்டும் என்றார்கள். அரசனும் அதன்படி செய்ய உத்தரவிட்டான். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் மதுவாணி ஆற்றங்கரையோரம் சென்று விழுந்தது. அந்த இடத்திற்கு அனைவரும் சென்று பார்க்கையில் அங்கு பேரதிசயமாக புலியும் பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன. புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து அங்கு சிவாலயம் எழுப்பினார்கள். மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்பட்டார்கள்.
ஒரு நாள் பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு பூஜை முடிந்த நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த ஆலயத்தின் வேறொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே சிறுவர்களும் விநாயகருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்காகத் தொடங்கிய குழந்தைகளின் பூஜையில் வினாயகரை கண்ட பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் புடைப்புச் சிற்பம் போல வளர்ந்து பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். குழந்தைகளின் சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தி என்பதால் அரசன் அவருக்கும் சிவனைப்போலவே பூஜை புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிட்டார்.
கேரளாவில் கும்பலா என்ற ஊரை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு சென்று வெற்றி வாகை சூடினார். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினார். அதை இன்றும் காணலாம். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து உள்ளது. இந்நாட்டு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.
ஒருமுறை மைசூர் மன்னன் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோவில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். பல ஆயிரம் இந்துக்களை வாள் முனையில் முஸ்லீமாக மாற்றினான். மாறாதவர்களை கொன்று குவித்தான். அவ்வேளையில் இந்தக் கோவிலிலும் நுழைந்து அவன் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறை விநாயகரை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே திப்பு கோவில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தினான். நீரை சிறிது அருந்தியவுடன் போரை நிறுத்தி விட உத்தரவிட்டு கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விட்டான். இன்றும் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது. இப்படி இந்தக் கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோவிலின் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.
மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். எனவே உற்சவ மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோவிலுக்கு கிடையாது.