மூலவர் போர்மன்ன லிங்கேஸ்வரர். இங்கு மூலவரே உற்சவராகவும் கருவறையில் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று இறைவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். போர் மன்னலிங்கேஸ்வரர் போத்துராஜா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். போர்மன்னலிங்கேஸ்வரர் ஊரின் பெயரைப் போலவே மங்கலத்துடனும் பெயரைப் போலவே போர் உக்கிரத்துடனும் காட்சி தருகிறார். ஊர் போத்துராஜ மங்கலம். போர்மன்னலிங்கேஸ்வரர் ஆண்டு முழுவதும் கருவரையில் தேரில் அமர்ந்திருக்கிறார்.
துவாபரயுகத்தில் பரமேஸ்வரனும் பார்வதியும் பூலோகத்தை சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பார்வதி தேவியார் மணலால் கோட்டையையும் கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார். அதன் அழகில் ரசித்த ஈஸ்வரன் அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். பார்வதி தேவியார் உருவாக்கிய மணல் கோட்டையை பாதுகாக்க யாக குண்டத்தில் இருந்து ஈஸ்வரனால் உருவானவர் ஸ்ரீபோர்மன்னன். வீரசாட்டை மல்லரி கொந்தம் கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் காவல் பணிபுரிகிறவராக நாட்டை காக்க இறைப் பணியாற்றினார் போர்மன்னன்.
மகாபாரத யுத்தத்தின் சமயம் பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவைப்பட்டது. போர்மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருந்தது. இந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளவும் பார்வையாலேயே எதிரிகளை வீழ்த்தும் வல்லமை படைத்த போர்மன்னனை போரில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார். எனவே போர்மன்னனை சந்திக்க கிருஷ்ணன் அர்ஜூனன் பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வந்தனர். போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது. அதிலும் பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்ப்பதில்லை.
கிருஷ்ண லீலை தொடங்கியது. கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும் அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும் பீமன் விறகு வெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை மதில் சுவற்றில் வைக்க அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைச் சந்திக்க காவலாளியிடம் அனுமதி கேட்டனர் கிருஷ்ணனும் அர்ஜூனனும். மன்னரின் அனுமதி கிடைக்கவே அரசவைக்குள் அழைத்து வரப்பட்டனர். அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு சிலிர்ப்பு. முதல் முறையாக பெண்ணை பார்ப்பதாலா இல்லை அர்ஜூனனின் வேஷத்தினாலா ஒன்றும் புரியவில்லை. ஆனால் மன்னர் அர்ஜூனனிடம் மயங்கி விட்டார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேட்டார். மன்னா நாங்கள் ஊருக்கு புதிதாய் வந்திருக்கிறோம். எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். என் மகனைத்தான் காவலாளிகள் சிறையில் அடைத்துள்ளனர். அவன் மிகவும் அப்பாவி தெரியாமல் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து விடுவியுங்கள் என்றாள் தாதிக்கிழவி வேடத்தில் இருந்த கிருஷ்ணன். சரி அவனை விடுவிக்கிறேன். அதற்கு பலனாக உன் மகளை எனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று கேட்டான் அரசன். அதற்கு தாதிக்கிழவி எனக்கு தங்களிடம் ஒரு உதவியாக உங்களிடமுள்ள ஆயுதங்கள் வேண்டும் அதனை தர தாங்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றாள். அர்ஜூனன் மீதுள்ள மோகத்தால் யோசிக்காமல் ஒப்புக் கொண்டு ஆயுதங்களை அளித்தான் அரசன்.
திருமண ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன் நாங்கள் வெளியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்து அங்கிருந்து கிளம்பினார்கள். விஷயம் மன்னருக்கு தெரிந்து கடும் கோபம் கொண்டார். அவர்களைப் பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். மன்னரின் கோபத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணன் உண்மையை விளக்கி பாரதப் போரிலும் அவரை பங்கேற்க வைத்தான் கிருஷ்ணன். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்துலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கிமீயில் உள்ள பசு மலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபாஞ்சாலி மகாமித்யம் என்ற நுாலில் இந்த வரலாறு உள்ளது.