தட்சிணாமூர்த்தி கோட்டப்பன் என்னும் திருப்பெயரில் ஒரு பீடத்தில் அமர்ந்து ஒரு காலை மற்றொன்றின் மீது ஏற்றி தலையை சிறிது உயர்த்தி சாய்ந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். வசீகரமான பார்வையுடன் நான்கு கைகளிலும் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. ஒளிரும் வெள்ளிக் கிரீடம் தலையில் உள்ளது. விஷ்ணு சிவலிங்கம் மற்றும் தேவி சிலைகளும் இதே சன்னதியில் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர்கரா இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முள்ளூர்கர பஞ்சாயத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான இருநிலம்கோட்டில் அமைந்துள்ளது. பிரதான சாலைக்கு மிக அருகில் பழமையான சிவன் கோவில் இது. இது கேரள அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இக்கோவில் குகைக் கோயிலாக விளங்கி வருகின்றது. ஒரு குகைக்குள் ஒரு சிறிய குன்றின் கீழ் விளிம்பில் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை இருக்கும் குன்று 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திடமான பாறைகளுடன் அமைந்துள்ளது.
இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமவாசிகள் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தனர். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு பெண் தொழிலாளி குகைக்குள் சென்றார். அங்கே அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது அவள் விரலில் ஒரு சிவப்பு திரவத்தைக் கண்டு தன் கை வெட்டப்பட்டு இரத்தம் வருகிறது என்று பயந்து தன் கையில் காயத்தை தேடினாள். கையில் காயங்கள் ஒன்றும் இல்லை. சிகப்பு திரவம் வரும் இடத்தை தேடினாள். பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்திய பாறைப் பகுதியைக் கவனித்தாள். அந்த திரவம் மெதுவாக துளிதுளியாக பாறையில் இருந்து வெளியேறுவதைக் கண்டாள். அவளின் பதட்டம் அதிகரித்தது. அவள் கிராம மக்களிடம் ஓடிச் சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னாள். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பாறைத் தளத்தைக் கண்டு பிடித்து கவனமாகப் பார்த்தார்கள். அதே திரவம் வெளி வருவதைக் கண்டார்கள். புதர்களில் இருந்த புல் மற்றும் புதர்களை மெதுவாகவும் கவனமாகவும் அகற்றத் தொடங்கினார்கள். இறுதியில் தட்சிணாமூர்த்தி தெய்வத்தின் முழு வடிவத்தைக் கண்டதும் திகைத்து பரவசத்தில் ஆழ்ந்தனர். கூப்பிய கரங்களுடன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தி பூஜைகள் செய்தார்கள். பிரதான கோவிலுக்கு மிக அருகில் சிறிய தேவி கோவில் உள்ளது. இங்கு வழிபடப்படும் அம்மன் கந்தன்காளி என்று அழைக்கப்படுகிறார்.