கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். திருமூலரின் 7 சீடர்களில் ஒருவரான காலாங்கிநாதர் இங்கு சித்தேசுவரசாமியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அலங்கார நுழைவு வாசலை கடந்ததும் விநாயகர் அருளுகிறார். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இக்கோயிலில் காளியம்மன் செல்வ விநாயகர் சன்னதிகளும் அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும் கஞ்சமலையின் மீது மேல்சித்தர் கன்னிமார் கோயிலும் உள்ளன. சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக் குளங்கள் உள்ளன. கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக் குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக் குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீர் குளத்தில் நிறைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்திக்கு ஏற்ப சித்தேசுவரசாமி இந்த மூலிகைகளை காற்றில் பரவ விட்டும் குளத்து நீரின் வழியாகவும் மேலும் பல வகைகளின் வழியாகவும் தனது குரு திருமூலர் காட்டிய வழியில் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறார். திருமூலரின் சீடராக இந்த கஞ்சமலை காலாங்கிநாதர் விளங்குகிறார். இதனை திருமூலர் தனது திருமந்திர பாடல்கள் வழியாக உணர்த்துகிறார்.

பாடல் #69: பாயிரம் – குருபாரம்பரியம்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

காலாங்கி என்ற இவரது பெயருக்கு பல பெயர் காரணங்கள் சொல்லப்படுகிறது. கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார். மேலும் அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்று பொருள். திருமூலரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றார்.

முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. கைலாயத்தில் இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகள் இந்த மலையில் இருப்பதை அறிந்து கொண்ட 18 சித்தர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான திருமூலர் அதனைக் காண இந்த மலைக்கு வந்தார். இங்கு உள்ள மூலிகைகள் வயது மூப்பும் மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக் கூடிய மூலிகைகள் ஆகும். இவர் தனது முதன்மை சீடரான கஞ்சமலை காலாங்கிநாதரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திருமூலரும் காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் சில காலம் தங்கியிருந்தார்கள். இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகளை தனது சீடரான காலாங்கி நாதருக்கு காட்டி அதனைப் பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார். தனது குருவான திருமூலர் சொல்லிக் கொடுத்தபடி அதனைப் பயன் படுத்திய காலாங்கிநாதர் என்றும் அழியாத இளமைத் தோற்றத்தை பெற்றார். காலாங்கிநாதருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தபின் அங்கிருந்து கிளம்ப திருமூலர் முடிவு செய்தார். அவருடன் காலாங்கி நாதரும் கிளம்ப தயாரானார். அப்போது திருமூலர் காலாங்கிநாதரிடம் நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.

குருவின் உத்தரவின் படி காலாங்கிநாதர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். வயதான தோற்றத்தில் இருந்த தான் இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி பொதுமக்களை அழைத்து வந்து காலாங்கிநாதரை தேடும் போது அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் காலாங்கி நாதர் தவக் கோலத்தில் காட்சி அளித்தார். அங்கிருந்த மக்களின் நோய்களை அங்கிருந்த மூலிகைகளை வைத்து சில வினாடிகளில் தீர்த்து வைத்தார். இதை கண்ட மக்கள் அவரை வணங்கி அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கி நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 ஆவது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.

சுமார் 8000  ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சமலை மிகுந்த மூலிகை வளம் கொண்டது. தங்கம் இரும்பு தாமிரம் ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.

சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது.

2 thoughts on “கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில்

  1. SAKTHIVEL Reply

    ஐயா சரியான வரலாற்றை பதிவு செய்யவும்

    • Saravanan Thirumoolar Post authorReply

      யாம் கொடுத்திருக்கும் இந்த வரலாற்று கதைக்கு திருமந்திரம் நூல் யாம் சான்றாக வைத்து பதிவேற்றியிருக்கிறோம். இந்த வரலாறு சரியானதில்லை தவறு என்று தாங்கள் கருதினால் அதற்கான சான்றும் உண்மையான வரலாறு என்று தாங்கள் கருதும் கதைக்கான சான்றும் தாங்கள் கொடுத்தால் இந்த வரலாற்றை நீக்கி விட்டு தாங்கள் கொடுக்கும் வரலாற்றை பதிவேற்றுகிறோம். நன்றி

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.