1.ஆலிங்க நதனம் 2.பஞ்சநதனம் 3.சிங்க நதனம் 4.யானை நதனம் 5.யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும். இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்
இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
அருமை.
இறைவனை தரிசிக்க காத்திருக்கிறேன்.