ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கிபி 7 ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள் சிவபெருமானுக்காக அர்பணித்த கோவில் இது. இக்கோவில் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும். பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால் இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயர் பெற்றது. சகஸ்ரலிங்கம் என்று சொல்லப்படும் ஒரே லிங்க திருமேனியில் செதுக்கப்பட்ட ஆயிரம் சிறு லிங்கங்கள் கொண்ட லிங்கம் கோவிலின் வெளியே உள்ளது. 40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள் பல விமானங்களுடன் உள்ளது. கோவில் கோபுரத்தில் பிராம்மி மகேசுவரி கௌமாரி நாராயணி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர் கங்கா தேவி யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது. கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு இந்திரன் சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. கையிலை மலையை தூக்கிய ராவணனுக்கு அருளும் சிவபெருமான் பார்வதி சிற்பம் மற்றும் தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது. கிபி 11 – 12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. 1903 இல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது.