குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில். சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதிகாலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது. தனது 27 மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவு கடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக சோமன் என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.
ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கும் சிவலிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது. அதேபோல கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர். கி.பி. 1025 டிசம்பர் மாதம் கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன் ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று 20000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள் தங்கம் வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது. பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில். முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.