திருவனந்தபுரத்தில் கிழக்கு கோட்டையில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள கண்டேஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் கேரளாவின் மிகவும் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு சிவன் கிழக்கு நோக்கி சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் காந்தேஸ்வரன் மகாதேவர் கைலாசநாதர் கௌரி சங்கரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். கோயிலில் மகாகணபதி தர்மசாஸ்தா நாகராஜர் முருகன் கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதியில் புனித குளம் காணப்படுகிறது.
கோவிலின் தென் மேற்கில் பழைய கண்டேஸ்வரம் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது. இக்கோவில் மதிலகம் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கண்டேஸ்வரம் கோவிலில் ஒரு வயதான மூதாட்டி துப்புரவாளர் வேலை செய்து வந்தார். அவர் தனது வேலை முடிந்ததும் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பது வழக்கம். துடைப்பம் மற்றும் கலயக்கூடம் என்று அழைக்கப்படும் பானையை அவள் அருகில் வைத்திருந்தாள். ஒரு நாள் அவள் பானையைத் தூக்க முயன்றபோது அது நகரவில்லை. அவள் ஒரு கல்லைப் பயன்படுத்தி பானையை உடைத்தாள். திடீரென்று பானையில் இரத்தம் வருவதைக் கண்டாள். சிவ பெருமான் சுயம்பு சிவலிங்க வடிவில் மூதாட்டிக்கு கொடுத்தார். அந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலே ஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
திருவாதிரை மஹோத்ஸவம் திருவிழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9 வது நாள் பல்லவிவெட்டா (அரச வேட்டை) ஆகும். 10-ம் நாள் காலை அத்ரியதர்ஷன். பத்து திருவாதிரை மஹோத்ஸவ விழா நாட்களிலும் அற்புதமான ஊர்வலங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மலையாள மாதமான கும்பத்தில் சிவராத்திரி விழா ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் மற்றொரு முக்கிய திருவிழாவாகும். சிவராத்திரி திருவிழாவின் போது பக்தர்கள் சிவனின் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை உச்சரித்து 108 முறை கோயிலை வலம் வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் தெய்வம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம் கோயில் திருவிழாவின் 5 வது நாளிலும் சிவராத்திரியின் போதும் மட்டுமே நடத்தப்படுகிறது.