திருமயம் என்ற சொல் திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. சத்ய சேத்திரம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து திருமெய்யம் என்ற பெயர் உருவானது. செங்குத்தான தெற்கு நோக்கிய மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு குடைவரைக் கோவில்களாக சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி உள்ளார்கள். இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. சிவன் மற்றும் பெருமாள் இணைந்த இக்கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் கோவிலிலுக்குள் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. சிவன் கோவிலையோ பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் இரண்டு மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.
சிவன் கோவிலில் மூலவர் சத்தியகிரீஸ்வரர். கிழக்கு நோக்கிய கருவறையில் சத்தியகிரீஸ்வரரின் லிங்கத் திருமேனி தாய்ப்பாறையில் உள்ளார். லிங்கத்தின் சிறிய கோமுகத்தை சீறும் சிங்கம் தாங்குகிறது. அம்பாள் வேணுவனேஸ்வரி கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருவம் எடுத்து இங்கு ஒளிந்து கொண்டு இறைவனை வணங்கி வந்தாள். அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (மூங்கில் காடாக) இருந்தது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். தீர்த்தம் சத்யபுஷ்கரணி. தலமரம் மூங்கில். சத்தியகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 13ஆம் நூற்றாண்டில் பிற்காலத்து பாண்டியர்களால் கட்டப்பட்டது. கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். விநாயகர் துர்க்கை கஜலக்ஷ்மி முருகன் ராஜராஜேஸ்வரி அம்மன் பைரவர் நவக்கிரகங்கள் சூரியன் சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி திருமேனி உள்ளது. சிவபெருமான் நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியிள்ளார். மண்டபத்தின் சுவர்களிலும் மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக உள்ளார். சத்ய மகரிஷி இறைவனுக்கு பூஜை செய்துள்ளார். சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது.
திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்தியகிரீஸ்வரரையும் திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்தியகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்கும் திருமெய்யர் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.
திருமயம் என்ற திருமெய்யம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில் ஆகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். தாயார் உஜ்ஜிவனதாயார் (உய்ய வந்த நாச்சியார்). தாயார் வீதி உலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும். தலமரம் ஆலமரம். தீர்த்தம் சத்திய புஷ்கரணி குளம் எண்கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்தியமூர்த்தி என்ற திருப்பெயர் வந்தது. இக்குடைவரைக் கோவிலின் இன்னொரு மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். யோக சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். யோக சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி விஸ்வக்சேனர் இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர்கள் இருவரும் பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும் மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்து விடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை பெருமாள் மெச்சிப் புகழ்ந்தார்.
சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன், அழகிய மெய்யன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் ஆகையால் திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது. திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துள்ளார். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.