தபகேஸ்வர் குகைக்கோவில்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது. இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. தபக் எனும் சொல்லுக்கு இந்தியில் சொட்டுவது என்று பொருளாகும். இந்த கோயிலைச் சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகள் உள்ளது. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளது.

மகாபாரத புராதாண கதையின் படி துரோணாச்சாரியின் மனைவி கல்யாணிக்கு இந்த குகையில் அஸ்வத்தாமன் பிறந்தார். துரோணாச்சாரியா மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன் மகன் அஸ்வத்தாமாவுக்கு பால் வழங்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் குழந்தைக்கு பாலை பாய்ச்சி உள்ளார். பாண்டவர்கள் இந்த சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். துரோணாச்சார்யார் அவரது மனைவியான கல்யாணி மற்றும் மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு இக்கோவிலில் சிற்பம் உள்ளது.

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது. திரிசூலகிரி நவிரமலை சஞ்சீவிகிரி மல்லிகார்ஜுன மலை கந்தமலை தென் கயிலாயம் என்று வேறு பல பெயர்களும் உள்ளது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப் பற்றியும் அப்பகுதி மக்களைப் பற்றியும் குறிப்பிடும் ஒரு சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப் பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நூல் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப் பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகை கோவில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனை காப்பாற்ற இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த போது அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்ற காரணத்தினால் இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்ற பெயரும் உண்டானது. ஒருமுறை அம்பிகை சிவனிடம் பூவுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தலம் எது என்று கேட்டாள். சிவபெருமான் அம்பிகை கேட்ட கேள்விக்கு பர்வத மலையை அடையாளம் காட்டினார். உலக மக்களின் நலனுக்காகத் அம்பாள் தவமியற்றிய இந்த மலை அன்னை பார்வதியின் திருப்பெயரை கொண்டு பர்வத மலை என்று போற்றப்படுகிறது. அன்னை பார்வதி தவமியற்றியதன் காரணமாக மலைகள் அனைத்திலும் உயர்வான மலை என்ற பொருளும் பர்வத மலைக்கு உண்டு. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை மலைகளின் அரசன் என்று பொருள்.

மூலவர் மல்லிகார்ஜுனர் என்ற காரியாண்டிக் கடவுள் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். பக்தர்களே இறைவனை தொட்டு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் செய்யலாம். இறைவனை இப்போதும் பௌர்ணமி அன்று இந்திரன் வந்து விழிபட்டு செல்கிறான் என்கிறது கோவில் புராண வரலாறு. அம்பாள் பிரம்மராம்பிகை பர்வத ராணி என்ற பெயரில் மூலவருக்கு இடது புறம் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இரவு அம்பாள் கண்ணத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்பாள் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் கோவில் கட்டிட அமைப்புகள் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியரும் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றனர். வீரபத்திரர் துர்க்கையம்மன் ரேணுகாதேவி சப்தகன்னியர் உள்ளனர். தீர்த்தம் பாதாள சுனைத் தீர்த்தம். இத்திருக்கோவிலின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி அருள்புரிகிறாள். அருகில் சப்த முனிகள் உள்ளனர். மலையில் உள்ள தீர்த்த சுனையிலிருந்து நீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறது.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போது அவர் தனது முதல் காலடியை பர்வதமலையில் வைத்தார். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்தார். பர்வத மலையில் அண்ணாமலையாரின் திருவடி உள்ளது. மலை உச்சியில் ராட்சச திருசூலம் உள்ளது. இக்கோவிலுக்கு கதவுகள் இல்லை. பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். பச்சை அம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம் நடந்து மலை அடிவாரத்திற்கு செல்லலாம். அங்கிருந்து சுமார் 1300 படிக்கட்டுகள் உள்ளது. அதனை தாண்டினால் அதன் பிறகு மலை ஏறுவது போல் ஒற்றை அடிப்பாதையில் கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறை அதில் ஒரு குழி உள்ளது. அதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர். உரல் பாறையைக் கடந்து சிறிது தூரம் மேல் நோக்கிச் சென்றால் பாழடைந்த மண்டபம் உள்ளது. இதற்கு பாதிமண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தை அடைந்தால் மலை உச்சியை அடைவதற்கு பாதி தூரம் வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். அதனால் பாதி மண்டபம் என்று பெயர் வந்தது. அந்த மண்டபம் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது. சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றையடிப் பாதை வழியில் வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம். இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத்தானது. இப்பகுதியை குமரி நெட்டு என்பர். மேலே சென்றால் சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம். வட்ட வடிவமாக அமைந்துள்ள இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில் வளைந்து ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். இதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும். இரண்டு மலைகளுக்கு இடையில் கனமான தண்டவாளங்கள் உள்ளது. இந்தப் பாதையைக் கடந்து சென்றால் ஒரு கல்மண்டபத்தினை அடையலாம். இதற்கு தீட்டுக்காரி மண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் பாதாளச்சுனை என்ற சிங்கக் கிணறு சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகம் உள்ளதென்றும் அதை மனிதர்கள் காண வழியில்லை என்றும் புராண வரலாறுகள் உள்ளது. சித்தர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாக வரலாறு உள்ளது. இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது. இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த பல குகைகள் உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த குகைக்குள் மக்கள் செல்லவே முடியாத படி பாதைகள் உள்ளது. அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித் தால் கடப்பாறை என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது. இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றைப் பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். மேலே ஓரளவு சம வெளிப் பிரதேசத்தை அடையலாம். மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டுகிறது.

பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்றும் பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் ஆராதனை செய்தால் கீழே தரை மட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறது தல புராணம். அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை என்று சொல்வது போல் பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்ற வாசகம் இருக்கிறது. இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் ஞானம் கைகூடும். திரிகால ஞானயோகம் கிட்டும் என்பது கோவில் புராண வரலாறு. திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம். காஞ்சி மகா பெரியவர் கடந்த 1944ம் ஆண்டு மார்கழி முதல் நாள் கிரிவலம் செய்தார். பர்வதமலை முழுவதுமே தனக்கு ஈசனாக தெரிந்தபடியால் அடியவர்களிடமும் பர்வதமலை சாட்சாத் அந்த பரமேஸ்வரனே என்று கூறி மலை மேல் ஏறினால் அவரை மிதிக்க வேண்டி வருமே என்று பர்வதமலையை கிரிவலம் செய்தார்.

கபிலர் மலை

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார். மலையில் உள்ள தென்றல் காற்று முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து எப்போதும் வீசிக் கொண்டு மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டே இருக்கும். அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடல் பாடப் பெற்றுள்ளார். கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார் இடும்பன் சன்னதி சித்தி விநாயகர் காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி கமலாம்பிகா அம்மன் சன்னதி உள்ளது. தலவிருட்சம் நாவல்மரம். இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது.

கபிலர்மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்திருக்கும் பாறையில் தான் முக்காலத்தில் கபிலமகரிஷி என்ற முனிவர் அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து பெரும் வேள்வி செய்து தவம் செய்து வந்தார். இன்றும் அந்தப் பாறையில் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித் தன்மையாக தெரிகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு கபில மகரிஷிக்கு தினசரி பூஜை நடந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கபில மகரிஷி தவம் செய்த இடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கபில மகரிஷி இம்மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக விளக்கிய முருகப்பெருமானை வணங்கி வந்தார். அதன்பிறகு, அவரால் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. கபில மகரிஷி இங்கு தங்கி தவம் இருந்து முருகனை வழிபட்டு வந்ததையொட்டியே இம்லைக்கு அவர் பெயரால் கபிலர் மலை என சிறப்பு பெயர் பெற்று புகழுடன் விளங்குகிறது. இங்கு மலையுச்சியில் கபில தீர்த்தமும் உண்டு. இச்செய்திகள் வடமொழி தல புராணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலர்மலை குறித்து சங்க நூல்கள் சிலவற்றில் குறிப்புகள் உள்ளன. அதன்படி கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் பொன் மற்றும் நாடும் பெற்று இம்மலையில் தங்கி பெரும் வேள்வி தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

செவி சாய்த்த விநாயகர்

திருச்சி அருகில் இருக்கும் அன்பில் என்ற ஊரில் இருக்கும் சத்தீயவாகீஸ்வரரை தரிசிக்க திருஞானசம்பந்தர் சென்றார். அவரை சோதிக்க எண்ணிய இறைவன் கோவிலுக்கு வரும் வழியில் இருக்கும் காவிரி ஆற்றில் வெள்ளத்தை வரவழைத்தார். கோவிலுக்குள் செல்ல இயலாத திருஞானசம்பந்தர் ஆற்றின் கரையில் இருந்தே இறைவனை பாட ஆரம்பித்தார், அப்போது கோவில் இருக்கும் வினாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து திருஞானசம்பந்தரின் பாடலை கேட்டு ரசித்தார் வினாயகர்.

திருமயம் குடைவரைக்கோவில்

திருமயம் என்ற சொல் திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. சத்ய சேத்திரம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து திருமெய்யம் என்ற பெயர் உருவானது. செங்குத்தான தெற்கு நோக்கிய மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு குடைவரைக் கோவில்களாக சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி உள்ளார்கள். இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. சிவன் மற்றும் பெருமாள் இணைந்த இக்கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் கோவிலிலுக்குள் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. சிவன் கோவிலையோ பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் இரண்டு மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.

சிவன் கோவிலில் மூலவர் சத்தியகிரீஸ்வரர். கிழக்கு நோக்கிய கருவறையில் சத்தியகிரீஸ்வரரின் லிங்கத் திருமேனி தாய்ப்பாறையில் உள்ளார். லிங்கத்தின் சிறிய கோமுகத்தை சீறும் சிங்கம் தாங்குகிறது. அம்பாள் வேணுவனேஸ்வரி கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருவம் எடுத்து இங்கு ஒளிந்து கொண்டு இறைவனை வணங்கி வந்தாள். அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (மூங்கில் காடாக) இருந்தது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். தீர்த்தம் சத்யபுஷ்கரணி. தலமரம் மூங்கில். சத்தியகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 13ஆம் நூற்றாண்டில் பிற்காலத்து பாண்டியர்களால் கட்டப்பட்டது. கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். விநாயகர் துர்க்கை கஜலக்ஷ்மி முருகன் ராஜராஜேஸ்வரி அம்மன் பைரவர் நவக்கிரகங்கள் சூரியன் சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி திருமேனி உள்ளது. சிவபெருமான் நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியிள்ளார். மண்டபத்தின் சுவர்களிலும் மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக உள்ளார். சத்ய மகரிஷி இறைவனுக்கு பூஜை செய்துள்ளார். சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது.

திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்தியகிரீஸ்வரரையும் திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்தியகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்கும் திருமெய்யர் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.

திருமயம் என்ற திருமெய்யம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில் ஆகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். தாயார் உஜ்ஜிவனதாயார் (உய்ய வந்த நாச்சியார்). தாயார் வீதி உலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும். தலமரம் ஆலமரம். தீர்த்தம் சத்திய புஷ்கரணி குளம் எண்கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்தியமூர்த்தி என்ற திருப்பெயர் வந்தது. இக்குடைவரைக் கோவிலின் இன்னொரு மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். யோக சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். யோக சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி விஸ்வக்சேனர் இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர்கள் இருவரும் பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும் மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்து விடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை பெருமாள் மெச்சிப் புகழ்ந்தார்.

சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன், அழகிய மெய்யன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் ஆகையால் திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது. திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துள்ளார். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.

குச்சனூர் சனீஸ்வர பகவான்

சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி இலை. வாகனம் காகம். தானியம் எள். திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான் முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும் நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை தலமரம் உள்ளது. நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் இக்கோவிலில் நடைபெறுகிறது. தினந்தோறும் பூஜை முடிந்த பின் பிரசாதம் முதலில் காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு பிராதத்தை வைப்பார்கள். பிராதத்தை காகம் உண்டபின் தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

குச்சனூர் பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினந்தோறும் இறைவனிடம் வேண்டி வந்தான். ஒரு நாள் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளாகி மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

சந்திரவதனன் வழிபாட்டில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவரவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடித்திருக்கிறார். அவரின் பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன என்றார். சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சொல்லி மறைந்தார். சந்திரவதனனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சுயம்புவாகத் தோன்றினார். சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் சனி பகவானால் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த செண்பக நல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன் பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது. தினகரன் மான்மியம் என்கிற பழமையான நூலில் இந்த தலத்திற்கான புராண வரலாறு உள்ளது. தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

நிறம் மாறும் அசலேஷ்வர் மஹாதேவ்

சிவ பெருமான் லிங்கவடிவில் இருக்கிறார். இவரது பெயர் அசலேஷ்வர் மஹாதேவ். லிங்கமானது காலை நண்பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. சிவலிங்கம் ஒரு நாளைக்கு மூன்று வேலை என காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும் உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப்பூ நிறத்திலும் பொழுது சாய்கையில் சற்று நிறம் மங்கிய நிலையிலும் இந்த லிங்கம் தரிசனம் தருகிறது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலில் கலர் மாறுவது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி பாதாளத்தில் புதைந்து உள்ளது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை இது உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது. அச்சலேஷ்வர் என்பது சமஸ்கிருத வார்த்தை அச்சால் என்ற சமஸ்கிருத வார்த்தையை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தையாகும். இதற்கு நகரவோ அசையவோ முடியாது என்று பொருள். சிவபெருமானின் அனைத்து கோவில்களிலும் சிவபெருமானை முழு லிங்கமகாகவோ அல்லது சிலை வடிவாகவோ வணங்கப்படுவார். இக்கோவிலில் இருக்கும் லிங்கம் சிவபெருமானின் கட்டைவிரலாக பாவித்து வணங்கப்படுகிறார். இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டில் பர்மர் வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் 1452 ல் மஹாராண கும்பம் என்பவர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு அச்சல்கர் என்று பெயரிட்டார்.

இங்குள்ள நந்தி சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து வித்தியாச உலோகங்களின் கலவையால் 4 டன் எடையில் செய்யப்பட்டது. இக்கோவில் வரலாற்றின்படி இங்கிருக்கும் நந்தி முஸ்லீம் படையெடுப்பாளர்களின் படையெடுப்பிலிருந்து பலமுறை கோயிலைப் பாதுகாக்திருக்கிறது. கோவிலை கொள்ளையடிக்க வரும் போது ஒவ்வொரு முறையும் மறைந்திருக்கும் தேனீக்கள் படைகளை கொட்டி கோயிலை பல முறை காப்பாற்றியுள்ளன. இக்கோவில் இருக்கும் இடத்தில் ராஜபுத்திரர்களும் ரிஷிகளும் முனிவர் பெருமக்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள். வசிஷ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனுப் பசுவுடன் இங்கு தங்கியிருந்து தவம்புரிந்து வேள்விகள் இயற்றியிருக்கிறார். அற்புதா என்ற பெயர் கொண்ட நாகம் ஒன்று சிவபெருமானின் வாகனமான நந்திதேவரின் உயிரைக் காப்பாற்றியது. இச்சம்பவம் நடைபெற்ற இடமான இந்த மலை அற்புதா காடுகள் என்ற பொருளில் அற்புதாரண்யம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து அபு பர்வதம் என்றும் பின்னர் மவுன்ட் அபு என்றும் மாறிப்போனது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமான தோல்பூர் ஆக்ராவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் ஜெய்பூரில் இருந்து 276 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதை வழியாக மவுன்ட் அபு கடந்து பயணித்தால் அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலை அடையலாம்.

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி

காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். காசியில் இருக்கும் அதே கால பைரவர் சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள் காசு இல்லாவிட்டால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் அருளியிருக்கிறார். மூலவர் விடங்கீஸ்வரர். அம்பாள் விசாலாட்சியம்மன். தலவிருட்சம் இலந்தை மரம். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் இக்கோவில் உள்ளது. விடங்கி முனிவர் தவம் இருந்து கட்டிய கோவில் ஆகையால் விடங்கீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இங்குள்ள சுப்ரமண்யர் சிலையில் முருகனின் வாகனமான மயிலின் தலை வழக்கத்துக்கு மாறாக இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூரசம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது

இந்து வனம் அரச மரங்களும் இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லை என்று தவித்த முனிவர் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற விஸ்வநாதர் முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். கோபத்தின் உச்சிக்கே போன வடுக பைரவர் அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர் மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படும் முன் பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி ஆலயம் எழுப்பினார். எட்டு பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் கொன்ற இடம் என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் குண்டடம் என்று மருவிவிட்டது.

பஞ்ச பாண்டவர்கள் இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது திரெளபதி மேல் அரக்கன் ஒருவன் ஆசை கொண்டதால் கோபப்பட்ட பீமன் அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான். இதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்கள் ரத்தக்காடு சாம்பல் காடு என்று உள்ளது. காலங்கள் கடந்தன. விடங்கி முனிவர் எழுப்பிய கோவில் வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பிற்கால மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய் கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர சோழ பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும். கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள் இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு. அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார். அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். ஐயா எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள் என்றார். அந்த வியாபாரி இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு என்று பொய் சொன்னார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர். மறுநாள் வியாபாரி மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு ஏதோ ஒரு சந்தேகம் வந்து பாண்டிய மன்னன் மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள் சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

வியாபாரி கதறினான் பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார். அதையெல்லாம் நம்பும் நிலையில் மன்னன் இல்லை. பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள் என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. கொங்கு வடுகநாதா என்னை மன்னித்துவிடு என்று புலம்பி அழுதான். நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான். என்னுடைய பெண் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன் நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன் என்றான் மன்னன். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள் தந்தையே என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும் தந்தையை நோக்கி நடந்து வந்தான். பரவசமடைந்த பாண்டிய மன்னன் என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று துதித்தான். வடுக பைரவர் நானும் விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன் என்று சொல்லி மறைந்தார் பைரவர்.

கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது பயறு பழையபடி மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு குண்டடம் சென்றான் மன்னன். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும் விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.

வடக்குநாதர் கோவில்

கேரள மாநிலம் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. மூலவர் வடக்குநாதர். மூலவர் முழுவதும் நெய்யினால் ஆனவர். மூலவர் வடக்குநாதர் 12 அடி உயரமும் 25 அடி அகலமுடைய நெய்லிங்கமாக எப்போதும் உருகாமல் பாறை போல் இறுகி உள்ளார். எப்போதாவது நெய் உருகி வெளிப்பட்டால் உடனே காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். பன்னீர் சந்தன அபிஷேகம் செய்தாலும் லிங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கோடையின் வெப்பமோ ஆரத்தி வெப்பமோ இந்த நெய்யை உருகி விழச்செய்யவில்லை. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய்க்கு வாசனை கிடையாது. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. கோவில் நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில் வடக்குநாதர் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார்.

கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர் சங்கரநாராயணர் கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஆலயத்தில் சிவனின் பூதகணமான சிம்மோதரனுக்கும் கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் சங்கு சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் நந்தி மூலவரை நோக்கியபடி அமர்ந்திருப்பார். திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி சிவனுக்கு எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் இருக்கிறார். பிரதோ‌ஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளுகிறார். அமிர்தம் கிடைக்க தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். கடைந்து முடித்ததும் அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில் மணியாக வந்து அமர்ந்துவிட்டது. இதனால் பிரதோ‌ஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார். வேறு யாரும் தொட அனுமதியில்லை.

ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். சத்ரிய குலத்தவர்கள் மீது கோபம் கொண்ட பரசுராமர் சத்ரிய குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர் சிவபெருமானுக்கு கோவில் நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்ட கடல் பகுதியில் நிலத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று பரசுராமரின் கையிலிருந்த வேள்விக்கான பொருள்கள் இருந்த பையை வீசியெறிய சொன்னார். பரசுராமரின் பையை தூக்கி எறிந்தார். கையை விழுந்த இடம் வரை கடல்நீர் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார் கடல் அரசர்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில் சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைக்க முடிவு செய்தார். சிவபெருமானிடம் இந்த இடத்தில் தங்கியிருந்து அதன் மூலம் இப்பகுதியை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார் பரசுராமர். சிவன் தனது மனைவி பார்வதி அவரது மகன்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியனுடன் பரசுராமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இக்கோவிலுக்கு வந்தார். சிவன் இப்போதிருக்கும் திருச்சூர் என்ற இடத்தில் நின்றார். பின்னர் அவரும் அவருடன் வந்தவர்களும் ஒளிமயமாகி மறைந்து விட்டனர். ஒளிமயமான இறைவனை பரசுராமர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் ஒரு பிரகாசமான சிவலிங்கமாக கண்டார். சிவலிங்கமாக மறைந்திருந்த இறைவனை நெய்யால் குளிர்வித்தார். இதனால் இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம் 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது.

பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் பல காலங்கள் இருந்த சிவலிங்கத்தை அந்நாட்டின் அரசன் மிகவும் வசதியான இடத்திற்கு மாற்றி ஒரு கோவிலில் வைத்து வழிபட முடிவு செய்தார். தெய்வத்தை புதிய இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. சிவலிங்கத்தை எடுக்க ஒரு சிரமம் இருந்தது. ஆலமரத்தின் ஒரு பெரிய பகுதியை வெட்டாமல் லிங்கத்தை அகற்ற முடியவில்லை. மரத்தின் கிளைகளை வெட்டும்போது அதன் ஒரு பகுதி சிலை மீது விழுந்து சிலை சேதமடையும் அபாயம் இருந்தது. ஆட்சியாளருக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாதபோது யோகதிரிப்பாடு என்பவர் லிங்கத்தை முழுவதுமாக மூடிமறைக்கும்படி லிங்கத்தின் மீது படுத்துக் கொண்டு மரத்தை வெட்டும்படி ஆட்களிடம் கேட்டுக்கொண்டார். வெட்டுதல் தொடங்கியது. அனைவரும் அதிசயிக்கும்படி மரத்தின் ஒரு துண்டு கூட லிங்கத்தின் அருகே எங்கும் விழவில்லை. சிவலிங்கம் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது, அது இப்போது வரை உள்ளது. பின்னர் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த கோயில் கட்டப்பட்டது.

ஆதிசங்கரரின் தாய் தந்தை இக்கோவிலில் 41 நாட்கள் விரதம் இருந்து பூஜை செய்ததன் பயனாக ஆதிசங்கரர் அவதரித்தார். வடக்குநாதர் கோவில் 7ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பெருந்தச்சன் என்பவரது காலத்தில் கட்டுமானம் சரி செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் யோகதிரிப்பாடு எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு கி பி 981 க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன் ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர். மன்னரின் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாக இருக்கிறது அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. காடு அழிக்கப்பட்ட பின் வருடாவருடம் இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழாவை இன்று வரை நடத்த முடியவில்லை. மூலவருக்கு இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் திருப்புகா வழிபாட்டிற்கு தேவலோகத்தினர் பலரும் வருகின்றனர். அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் இருக்ககூடாது என்பதற்காக இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.