பாதாள புவனேஷ்வர்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர் குளிப்பதற்காக வைத்துயிருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது அந்த உருவத்தை தனது பிள்ளையாக பாவித்த பார்வதிதேவி எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்ககூடாது என்று பிள்ளையாருக்கு சொல்லி விட்டு நீராட சென்றுவிட்டார். அந்த சமயம் சிவன் பார்வதியை பார்க்க அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்ச்சிக்கும் போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி நடந்து முடிந்தவற்றைக்கண்டு மனம் வருந்தினாள். இதைப்பார்த்த சிவபெருமான் பிரம்மனை அழைத்து விநாயகர் தலை இல்லாத உடம்பில் பொருத்துவதற்காக தலையை கொண்டு வரச்சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக்கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான் விநாயகர் உடல் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ்தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர்பெறச்செய்தார். வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் இந்த குகையில் அப்படியே இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குமாஊன் என்ற இடத்தில் உயர்ந்த மலை சுற்றிலும் பாய்ந்தோடி செல்லும் நதி அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையில் பாதாள புவனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் அருள்புரியும் இடம் சுண்ணாம்பு குகை ஆகும். இந்த குகை 100 அடி ஆழமும் 160 அடிநீளமும் கொண்டது. பாதாள புவனேஸ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் பாரி ஜாதப்பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட வினாயகர் தலை மேல் விழுகிறது. இந்த குகைகோயில் இந்தியதொல்பொருள் ஆய்வுமையத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாதாள புவனேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கவேண்டும். அனைவரும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தான் குகைக்குள் சென்று பார்க்கமுடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக்குகையில் சிவபெருமானுடன் 33 கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிக்கிறார்.

திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார் ஆதிசேஷன் ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச்சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்கவைக்கும் காட்சியைக் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபாரயுகத்தின் போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிராத்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்தகுகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது. படிகளின் நடுவே நரசிம்மனின் உருவம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கிழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிஷேசன். பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைதாண்டி ஒரு யாககுண்டம் உள்ளது. இங்கு தான் ஜனமேஜயன் தன் தந்தை பரிசித்தன் மரணத்துக்கு பழி வாங்குவதற்க்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்பயாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளைகுகை கைலாயமலையை சென்று அடைகின்றது என்று புராணங்கள் கூறுகின்றது. அதன் முன்பாக சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஒட்டுடன் காட்சி தருகிறார். சிவன் தன் சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் சடாமுடியை போல் மலையின் ஒரு பகுதி தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே பைரவர் முன்னால் முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே அன்னப்பட்சி தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் காட்சி. கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுயிருந்தது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. அடுத்து கழுத்தில் பாம்புயை சுற்றியப்படி ஜடாமுடியுடன் சிவன். சிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடுவதுபோல் காட்சி கொடுக்கின்றார். மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஜராவதம். குகையின் ஒரு பகுதியில் கலியுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இதன் மேலிருக்கும் கூம்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது லிங்கத்தின் மேலிருக்கும் மலையை எப்பொழுது தொடுகிறதோ அப்பொழுது கலியுகம் முடியும்.

சுருட்டப்பள்ளி கொண்டீஸ்வரர்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானே இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினர். தேவர்களும் அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் திரட்டி சிவனிடம் தந்தார். உடனே சிவன் விஷாபகரண மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்பாள் அமுதாம்பிகை ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி என பெயர் கொண்ட இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும் ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இக்கோவிலில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் எனப்படுகிறார். இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில் ஆலகால விஷம் உண்டபின்னர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இக்கோவிலில் உள்ளனர். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி. சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி, பதுமநிதி. என்று அனைவரும் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும் பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும் கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

150 ஆண்டுகளாக முதலை காவல் காக்கும் கோவில்

கேரளத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அனந்தபுரா கோவில் உள்ளது. இக்கோவிலில் வில்வமங்கலம் என்ற முனிவர் இக்கோவிலில் தவம் புரிந்த போது அம்முனிவருக்கு சிறுவன் வடிவில் காட்சி தந்த மஹாவிஷ்ணு இக்கோவிலின் குளத்தையொட்டி உள்ள ஒரு குகையில் சென்று மறைந்தார். அத்தகைய புனிதமான குகைக்குள் மற்ற மனிதர்கள் யாரும் செல்லாதவாறு இறைவனின் கட்டளைப்படி இம்முதலை காவல் காக்கிறது.

இக்கோவிலைச் சுற்றி பச்சைப் பசேல் என்று பாசி படிந்திருக்கும் குளத்தில் இந்தமுதலை வாழ்ந்து வருகிறது. முதலைகள் இயற்கையாகவே மாமிசம் உண்ணும் விலங்காகும். ஆனால் இக்குளத்தில் உள்ள இந்த முதலை இக்குளத்திலுள்ள மீன்களைக்கூட உண்டதில்லை. தினம் இருவேளை பூஜைகள் முடிந்து அரிசியால் செய்யப்பட்ட பிரசாதத்தை இக்கோவிலின் அர்ச்சகர் அக்குளத்தின் ஓரம் வந்து அம்முதலையை பபியா என்று பெயர் கூறி அழைக்கிறார் பிரசாதத்தை முதலை வந்து பெற்றுக்கொள்கிறது. அதுவே அதற்கு உணவு. மேலும் இக்குளத்தில் அவ்வப்போது குளித்து வரும் இக்கோவிலின் அர்ச்சகரையோ பக்தர்களையோ இது வரை இம்முதலை அச்சுறுத்தவோ தாக்கவோ செய்தததில்லை. கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் ஒரு முதலை இறந்து விடுமேயானால் மறு தினமே மற்றொரு முதலை குளத்தில் தென்படும். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் இதுவரை எவரும் கண்டதில்லை. முதலைகள் வாழும் பெரிய ஆறுகளோ சதுப்பு நிலங்களோ இக்கோவிலுக்கு அருகாமையில் ஏதுமில்லாத போது இங்கு இந்த முதலை தோன்றுகிறது. இக்கோவில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவார்பூ கிருஷ்ணர்

ஒவ்வொருநாளும் கோவில் திறந்திருக்கும் நேரம் 23.58 மணிநேரம். கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்கும். நெய்வேத்தியம் நடந்துகொண்டே இருக்கிறது எனவே 23.58 மணி நேரமும் 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. கோவில் நடை சாத்திய அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியுடன் தயாராக இருக்கிறார். கிருஷ்ணர் பசியோடு இருப்பார் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையிலேயே கிருஷ்ணர் இக்கோவிலில் மூலவராக இருக்கிறார். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை உலர்த்தியபின் முதலில் நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும். பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும். இந்த கோவில் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே. பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணிக்கு ஆலயத்தை மூடுவதற்கு முன்பு பூசாரி சத்தமாக இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா என கேட்டுவிட்டு தான் நடையை சாத்துவார். 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் இக்கோயில் அமைந்துள்ளது.

சோம்நாத் கோயில்

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில். சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதிகாலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது. தனது 27 மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவு கடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக சோமன் என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கும் சிவலிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது. அதேபோல கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர். கி.பி. 1025 டிசம்பர் மாதம் கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன் ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று 20000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள் தங்கம் வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது. பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில். முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.

அகோபிலம் நரசிம்மர்

இன்று யாரோடு போய் மோதிவிட்டு வரலாம் என்று தனது படைகளோடு ஆலோசனை நடத்தினான் ராவணன். இறுதியில் பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறார் அவரோடு இன்று சண்டைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து ராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் புறப்பட்டது.

மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர். நரசிம்மமூர்த்தி இரண்யவதம் நிகழ்த்திய போது அருகிலிருந்த பிரஹலாதனை அழைத்து இனி உன் தலைமுறையில் யாரையும் கொல்லமாட்டேன் என்றே வரம் தந்தார். எனவே எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல் அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும் அந்த பாதாளலோகத்திற்கு நானே காவல் செய்வேன் என்றும் கூறி பாதாளலோகத்தைக் காவல் செய்துவந்தார் எம்பெருமான்.

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்கு சண்டை போட வந்தான் இராவணன். வாசலில் காவல்நிற்கும் எம்பெருமானைப்பார்த்து மஹாபலியைக் காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் என்று போய்ச்சொல் என்று விரட்டினான் இராவணன். எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார். இராவணனைப் புன்சிரிப்போடு வரவேற்ற மஹாபலி இராவணா என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும் முதலில் அதோ அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும் பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன் என்றார்.

அப்பொருளில் என்ன இருக்கிறது என ராவணன் கேட்டான். அதற்கு இடிஇடியெனச் சிரித்த மஹாபலிச் சக்கரவர்த்தி இரவணனிடம் கூறினார். முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் செய்யும் முன்பாக இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி அவ்வாறு சுற்றியபோது என் பாட்டானார் தன் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன் என்று விலாவாரியாகச் சொன்னார் மஹாபலி. கடுக்கனை தூக்கமுடியாமல் இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போய் படைகளை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான்.

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில் அவரோடு கூடவே சங்கு சக்கரம் முதலான அவரது திவ்ய ஆயுதங்களும் புறப்பட்டன. அவைகளுக்கெல்லாம் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் நரசிம்ம மூர்த்தி. நான் புதுமையான அவதாரம் நிகழ்த்தப் போகிறேன். இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம் என்று முடிவெடுத்தார். இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியை கைலாய மலையை தூக்க முற்பட்ட உலகத்தை ஆட்சி செய்த இராவணனால் தூக்க இயலவில்லை என்றால் கடுக்கனின் முழு பகுதியின் எடையை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

கடுக்கனின் ஒரு பகுதி பளுவே இப்படி இருந்தால் முழுபகுதி கடுக்கனை காதில் மாட்டியிருந்த இரண்யகசிபுவின் வல்லமை எப்படி பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி தன் விரல் நகத்தினாலே அவனை சம்ஹாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் அகோபலம் அகோபலம் என்று முழங்கினார்கள். அப்பெயரே சற்றே மருவி அகோபிலம் என்னும் ஆந்திர தேசத்திலுள்ள திவ்யதேசத்தின் திருப்பெயராயிற்று. தற்போது அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

பஞ்சநதன நடராஜர்

1.ஆலிங்க நதனம் 2.பஞ்சநதனம் 3.சிங்க நதனம் 4.யானை நதனம் 5.யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும். இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்

இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

பசுபதீஸ்வரர்

மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

கிரிஸ்னேஸ்வரர் கோவில் ஔரங்கபாத்

மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் கோவில் திருத்த வேலைகளைச் செய்வித்தார்.