யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்
சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும் மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன் சிவனே தன்னையும் மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போல அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.
திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இந்த இந்த சிற்பம் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக தற்போதைய வரலாறு உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. நந்தியின் அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலை செதுக்கப்பட்ட பாறை வளர்ந்து வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து வருவதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர் இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். தெலுங்கில் நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அது தான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. இந்த கோவிலை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹாரா புக்க ராயாவால் கட்டப்பட்டது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சில காலம் இங்கு தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றியுள்ளார். வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி இந்த நந்தி சிலை உயிர் பெற்று வரும்போது இந்தக் கலியுகம் முடியும்.
சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.
தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அழகிய ஆஸ்ராமம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு சாஸ்தா ஆலயம் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் வரலாறு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.
ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில் அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தர்ம பத்தினி அனுசூயா தேவி. இவர் கற்பில் சிறந்தவர். ஒரு முறை அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில் அடியார்களின் வடிவத்தில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று அடியார்களும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க முன்வந்தாள். அதுவரை ஆசனத்தில் அமர்ந்திருந்த அடியார்கள் உடனடியாக எழுந்துவிட்டனர். அதைக் கண்டு மனம் வருந்திய அனுசூயா தேவி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று மூவரிடமும் கேட்டாள்.
அதற்கு அந்த அடியார்கள் மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள் தற்போது உண்ண வேண்டு மென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது என்று கூறியவர்கள் மேலும் தொடர்ந்து பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பரிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம் என்றனர். இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும் மனதைத் தேற்றிக் கொண்டு கணவனே கடவுள் என்றும் கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் அடியார்கள் கூறியவாறு அமுது படைப்பேன் எனத் தெளிந்து தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறக்கடவது என அடியாளர்களின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள். முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளானார்கள். பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும் அத்திரி முனிவரின் ஆசிரமம் வந்து அனுசூயா தேவியை வேண்ட அவளும் மீண்டும் அவர்களுக்கு சுயவுருவை அளித்தாள்.
அத்திரி மகரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம் தான் தற்போது ஆஸ்ராமம் என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்திரி மகரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அத்திரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கோவிலின் அருகில் தீர்த்தக்குளமாக இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா என உரக்கக்கூவினார். அது நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தாவாக மாறிவிட்டது. அஞ்சனம் என்றால் மை. எழுதிய என்றால் தீட்டிய என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.
இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். சாஸ்தா கோவில்களில் சபரிமலை ஐயப்பனைப் போலவே சாஸ்தாவின் சிலையும் கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு வலக்கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் சுருளாக தோள்பட்டைக்குக் கீழே இருப்பதோடு நடு உச்சியில் கொண்டையுடன் பூணூலும் அணிந்திருக்கின்றார். கழுத்தில் பதக்கமும் இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும் திருநீற்றுப் பட்டையும் அணிந்துள்ளார். இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது.
ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ஜுன மண்டபம் வடகிழக்கு ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை சுல்தான்கள் புத்தகத்தில் துலுக்க நாச்சியார் பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இசுலாமிய வழக்கப்படி அகிலும் சந்தனமும் கலந்த தூபப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.
மாலிக் கபூர் தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமைப் படைத்தலைவர். தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன் கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார். திருவரங்கத்தினை கொள்ளையடித்த போது டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள் அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி தன் அறையிலேயே வைத்துக் கொண்டு அந்த அரங்கனை உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.
அரங்கன் ஆக்கிரமிப்பாளர்களுடன் டில்லி செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி திருக்கரம்பனூரைச் சேர்ந்தவள். தானும் அவர்களைப் பின் தொடர்ந்து டில்லி சென்றாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை பின் சென்ற வல்லி என்று போற்றி வைணவம் பாராட்டுகிறது. அரங்கனை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் பின்சென்ற வல்லி என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அரங்கன் என்பதை அறிந்த மன்னர் அரங்கனை கொண்டு செல்ல அனுமதி தந்து அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.
இளவரசி கொடுக்க மறுக்கிறாள். இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாகயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து தன் அறையில் அரங்கனைக் காணாமல் தொலைந்தது அறிந்து பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார். அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிடுகிறாள். டில்லியில் இருந்து இளவரசி வந்திருப்பதை அறிந்த தலைமை பட்டரோடு சிலர் தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல் கோவில் மூடியிருப்பதைக் கண்டு தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள். அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து துலுக்க நாச்சியார் என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது. பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள். மதம் கடந்த அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக இருக்கும் ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். வெந்நீர் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.
விக்கிரங்களோ அல்லது சிலையோ எதுவுமே இல்லாத ஆகம விதிகள் பிரகாரம் கட்டப்படாத ஒரு முருகன் கோவில் கதிர்காமம். இக்கோவிலின் ரகசியம் இங்கு உள்ள இயந்திரம் அடங்கிய பெட்டி மட்டுமே. இந்த இயந்திரம் 10000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. தமிழில் ஓம் எழுத்துடன் கூடிய ஒரே இயந்திரம்.
அமர்நாத் குகைக்கோவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க புனிததலம். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. புராண இதிகாசங்களின் படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன் பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்திருக்கின்றார். சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.
சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள் மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி சிவலிங்கமாக உருப்பெருகிறது. பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும் பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்று வரை ஒரு ஜோடி மலை புறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும் இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 அடியில் நீளத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நீரில் மிதந்தபடியே இருக்கின்றது. 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன
டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை.
இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார். கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது.
விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி. தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாகத் தான் இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.