அகோபிலம் நரசிம்மர்

இன்று யாரோடு போய் மோதிவிட்டு வரலாம் என்று தனது படைகளோடு ஆலோசனை நடத்தினான் ராவணன். இறுதியில் பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறார் அவரோடு இன்று சண்டைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து ராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் புறப்பட்டது.

மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர். நரசிம்மமூர்த்தி இரண்யவதம் நிகழ்த்திய போது அருகிலிருந்த பிரஹலாதனை அழைத்து இனி உன் தலைமுறையில் யாரையும் கொல்லமாட்டேன் என்றே வரம் தந்தார். எனவே எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல் அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும் அந்த பாதாளலோகத்திற்கு நானே காவல் செய்வேன் என்றும் கூறி பாதாளலோகத்தைக் காவல் செய்துவந்தார் எம்பெருமான்.

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்கு சண்டை போட வந்தான் இராவணன். வாசலில் காவல்நிற்கும் எம்பெருமானைப்பார்த்து மஹாபலியைக் காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் என்று போய்ச்சொல் என்று விரட்டினான் இராவணன். எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார். இராவணனைப் புன்சிரிப்போடு வரவேற்ற மஹாபலி இராவணா என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும் முதலில் அதோ அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும் பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன் என்றார்.

அப்பொருளில் என்ன இருக்கிறது என ராவணன் கேட்டான். அதற்கு இடிஇடியெனச் சிரித்த மஹாபலிச் சக்கரவர்த்தி இரவணனிடம் கூறினார். முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் செய்யும் முன்பாக இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி அவ்வாறு சுற்றியபோது என் பாட்டானார் தன் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன் என்று விலாவாரியாகச் சொன்னார் மஹாபலி. கடுக்கனை தூக்கமுடியாமல் இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போய் படைகளை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான்.

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில் அவரோடு கூடவே சங்கு சக்கரம் முதலான அவரது திவ்ய ஆயுதங்களும் புறப்பட்டன. அவைகளுக்கெல்லாம் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் நரசிம்ம மூர்த்தி. நான் புதுமையான அவதாரம் நிகழ்த்தப் போகிறேன். இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம் என்று முடிவெடுத்தார். இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியை கைலாய மலையை தூக்க முற்பட்ட உலகத்தை ஆட்சி செய்த இராவணனால் தூக்க இயலவில்லை என்றால் கடுக்கனின் முழு பகுதியின் எடையை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

கடுக்கனின் ஒரு பகுதி பளுவே இப்படி இருந்தால் முழுபகுதி கடுக்கனை காதில் மாட்டியிருந்த இரண்யகசிபுவின் வல்லமை எப்படி பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி தன் விரல் நகத்தினாலே அவனை சம்ஹாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் அகோபலம் அகோபலம் என்று முழங்கினார்கள். அப்பெயரே சற்றே மருவி அகோபிலம் என்னும் ஆந்திர தேசத்திலுள்ள திவ்யதேசத்தின் திருப்பெயராயிற்று. தற்போது அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.