பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.
குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.