திருமூவலூர் கோவில்

மூலவர் புண்ணாகீஸ்வரர் வேறு பெயர்கள் மார்க்கசகாயேசுவரர் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல். அம்பாள் மங்களநாயகி சவுந்தர நாயகி. இத்தலத்தில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு தனி சன்னிதி உள்ளது. இச்சன்னிதியின் கருவறைச் சுவரில் வெளிப் புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அன்னையுடன் மங்களாம்பிகை என்ற அம்பாளுக்கும் தெற்கு நோக்கிய தனி சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்தரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும் லலிதா திரி சடையும் சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது. ஆலய தல விருட்சம் புன்னை மரம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி துர்கா புஷ்கரணி மற்றும் உபமன்யு முனிவர் வழிபட்ட உபமன்யு கூபம் என்னும் கிணறு காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்த கட்டம் ஆகியவைகளாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்தில் ராஜகோபுரத்திற்கு வெளிப்புறம் விநாயகர் முருகன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் உயர்ந்த கொடி மரமும் நான்கு திக்குகளை நோக்கும் விதமாக வேத நந்திகளை நான்கு பக்கமும் கொண்ட பலிபீடமும் அமைந்துள்ளது. இதுபோன்ற பலிபீட அமைப்பு வேறெந்த ஆலயத்திலும் இல்லை. இறைவனை நோக்கியவாறு அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்.

தாரகாசுரனின் மைந்தர்களான தாருகாட்சகன் கமலாட்சகன் வித்யுன்மாலி ஆகிய மூவரும் தந்தையைப் போலவே கடுந்தவம் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றனர். அந்த அசுரர்கள் மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மன் அளித்தார். அந்தரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட அந்த திரிபுரங்களுக்குள்ளும் சோலைகள் சிவாலயங்கள் குளங்கள் போன்ற வசதிகள் இருந்தன. கற்பக விருட்சமும் காமதேனும் அங்கிருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றின. தேவதச்சனான மயனைக் கொண்டு தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும் கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும் வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும் தங்கள் நகரில் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர் களின் மூன்று நகரங்களும் ஒளியுடன் பிரகாசித்தன. ஆயினும் அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும் போது பல ஜீவராசிகள் அழிந்தன நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி சொர்க்கம் முதலியவற்றில் இந்த நகரங்கள் நிலைபெறும் போது தேவர்கள் மனிதர்கள் முனிவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளடைவில் அசுரர்கள் தங்கள் பிறவிக் குணத்தை காட்டத் தொடங்கினர். அவர்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி தேவர்கள் முனிவர்கள் மனிதர்களுக்கு துன்பங்களை இழைத்தனர். இதனால் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் பிரம்மா விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவர்கள் தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானை சரணடைந்தனர்.

சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இதற்கு தேவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி அனைத்து சக்திகளையும் திரட்டி வைதீகத் தேரை உருவாக்கப்பட்டது. அதனை பிரம்மதேவன் ஓட்ட முடிவானது. மேரு மலையை வில்லாக்கி வாசுகி என்ற நாகத்தை நாணாக்கி திருமாலை அம்பின் தண்டாக்கினர். வாயுவை அம்பின் அடிப்பாகமாகவும் அக்னியை அம்பின் நுனிப்பாகமாகவும் செய்தனர். இப்படி சக்தி வாய்ந்த வில் அம்பை தன் கையில் ஏந்திய சிவன் அசுரர்களின் கோட்டையை நோக்கி குறி வைத்தார். அப்போது நம்முடைய பங்களிப்பு இல்லாமல் இது நடக்காது என பிரம்மாவும் விஷ்ணுவும் கர்வம் கொண்டனர். அதை தன் ஞானக் கண்ணால் உணர்ந்த சிவன் சத்தமாக சிரித்தார். அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி எவரது துணையும் இன்றி மூன்று அசுரர்களையும் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கியது. அசுரர்களும் மாண்டுபோனார்கள். இதைக் கண்ட திருமாலும் பிரம்மனும் தங்கள் கர்வத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்கள் செய்த சிவ நிந்தனையால் பாவம் வந்து சேர்ந்தது. அந்த பாவத்தைப் போக்க திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே வழிகாட்டும்படி வந்து வேண்டி நின்றனர். இருவரையும் பார்த்த சிவன் காவிரிக் கரையில் புன்னாகவனம் எனப்படும் புன்னை மரக்காட்டில் ஒரு மரத்தடியில் லிங்க ரூபமாய் நான் இருக்கிறேன். அங்கு வந்து என்னை பூஜித்து விமோசனம் பெறுங்கள் என்று அருளினார். அதன்படி திருமாலும் பிரம்மனும் இத்தலம் வந்து லிங்கத் திருமேனியைத் தேடினர். அப்போது வேடம் உருவில் வந்த சிவபெருமான் அவர்களை எதிர்கொண்டு புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார்.

பிரம்மனும் விஷ்ணுவும் மீண்டும் ருத்ரமூர்த்தியை வேண்டி தாங்களே லிங்கத்திற்கு பூஜை செய்து காட்டியருள வேண்டும் என்றனர். அதன்படி சிவனே வந்து இத்தல லிங்கத் திருமேனியை பூஜித்து வழிபடுவதற்கான வழியைக் காட்டியருளினார். இப்படி வழி (மார்க்கம்) காட்டி பூஜையையும் உடனிருந்து செய்தமையால் (சகாயம்) மார்க்கசகாயேசுவரர் என்று அழைக்கப்பட்டார். இதையே அழகுத் தமிழில் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல் என்று பெயர் பெற்றார். சிவன் பிரம்மன் திருமால் ஆகிய மூவரும் புண்ணாகீஸ்வரரை பூசித்ததால் இத்தலத்திற்கு மூவரூர் (மூவர் ஊர்) என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் மூவலூர் என்று மாறிப்போனது.

மகிஷாசுரன் என்ற அசுரன் தவம் செய்து பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணத்தால் எந்த ஆண்களாலும் தன் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றான். பின்னர் தேவர்களுக்கும் மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். மகிஷாசுரனை வதம் செய்ய பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்த சிவன் அன்னை பார்வதியிடம் செல்லுமாறு கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும் அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவிமடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால் அழகிய முகத்தையும் திருவுருவத்தையும் பெற்றாள். அதோடு மீண்டும் தவம் இயற்றி இறைவனை மணந்தார்.

இக்கோவில் 10 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இத்தலத்தில் 1925 ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழ தேவன் காலம் கிபி1120 மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் கிபி1189 மற்றும் மூன்றாம் ராஜேந்திர சோழன் கிபி 1225 காலக் கல்வெட்டுகளில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற் காசுகள் இறைவன் இறைவிக்கு வழங்கிய ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறைவன் மூவலூர் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் இருக்கிறது.
மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல். தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல். மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல். வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் எனப்படும் நான்கு திசை வள்ளல்களில் ஒருவராகவும் இத்தல இறைவன் திகழ்கிறார். இத்தலத்து இறைவனை பிரம்மா விஷ்ணு துர்க்கை சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும் ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.