மூலவர் சுக்ரீஸ்வரர் மற்றும் மிளகேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். சுக்ரீஸ்வரர் லிங்கம் 31.5 அடி உயரம் கொண்டதாகும். 28 ஆக விதிகளை கணக்கிட்டு 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வலதுபுறம் ஆவுடை நாயகி தனி சன்னிதியில் அருள்புரிகிறாள். தலமரம் வில்வமரம் மற்றும் மாமரம். ஊர் திருப்பூர். புராண பெயர் முகுந்தாபுரிபட்டணம். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர் தட்சிணா மூர்த்தி சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் பைரவர் சன்னதியும் கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. பஞ்ச லிங்க கோவிலில் மூலவராக அக்னி லிங்கமாகவும் நீர் நிலம் காற்று லிங்கங்கள் மூன்றும் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. மற்றொன்று ஆகாச லிங்கம் கண்ணுக்கு தெரியாது. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது என்று தல வரலாற்றில் குறிப்படப்பட்டுள்ளது. யாக அம்மன் தனியாக அருள் பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில் தெற்கு வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல் மூலவரை நேரடியாக எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல் மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
கோயில் கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தில் சூரிய ஒளி இறைவன் மேல் விழுவதற்கேற்ப மூன்று துவாரங்கள் இருந்துள்ளது. தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் வேளையில் சுவாமி சிலையின் நெற்றியில் சரியாக சூரிய ஓளி விழும் அற்புதம் முன்பு நடந்து வந்தது. கோயில் பாதுகாப்பு நலன்கருதி தற்போது துவாரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. கருவறைக்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் சனீஸ்வரர் அருகருகே வீற்றிருக்கின்றனர். நான்கு புறத்திலும் சிவன் அமர்ந்த நிலையில் முழு உருவமாக வீற்றிருக்கிறார். சிவனுக்கு மேல் சிவபெருமானின் சிரசு இருப்பது போன்ற அமைப்புடன் கோபுர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பேரூர் கோவிலுக்கு அடுத்து சிறப்பான வேலைப் பாடுகளுடன் சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன் குளம் கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி தெப்பக்குளம் உள்ளது.
கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இருக்காது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மாட்டின் காதையும் கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின் தவறுக்கு பிராயசித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான் எனவும் பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும் மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. நவக்கிரகத்தில் ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் சனீஸ்வரர். இவர் இங்கு சிவனை நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
கோயில் வழியாக பாசிப் பயறுகளை கொண்டு சென்ற வணிகர் ஒருவரிடம் உன் வண்டியில் என்ன கொண்டு செல்கிறாய் என்று மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்டுள்ளார். இவரிடம் ஏன் கூற வேண்டும் என மறைக்க நினைத்த வணிகர் அனைத்தும் மிளகு என கூறியுள்ளார். பொய் கூறியதால் வண்டி மூட்டையில் இருந்த 100 பயறு மூட்டையும் மிளகாக மாற்றிவிட்டார் சிவபெருமான். விற்பனைக்கு கொண்டு சென்ற போது அதிர்ச்சியடைந்த வியாபாரி ஏன்? இப்படி நடந்தது என வியந்து யோசித்துள்ளார். வழியில் ஒருவர் கேட்டாரே என நினைத்த போது கண்முன் தோன்றிய சிவபெருமான் நான்தான் கேட்டது என கூறியுள்ளார். மீண்டும் என் கோயிலுக்கு வந்து நீ மிளகு வைத்து பூஜிக்க வேண்டும் என கூறியுள்ளார். வந்த வழி இடம் தெரியாது என வியாபாரி கூறினார். நீ வந்த வழியில் வாகனத்தை திருப்பு வண்டி மாடு வந்து நிற்குமிடம் என் ஆலயம் என சிவபெருமான் கூறியுள்ளார். கோயிலுக்கு வந்த வியாபாரி மிளகு வைத்து வழிபட்டவுடன் வண்டியில் இருந்த மிளகு பாசிப்பயறாக மாறி விட்டது.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில் சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும் 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில் காவல் தெய்வமாகவும் 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனால் வணங்கப்பட்டும் 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில் இந்திரனின் வாகனமான ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது எனவும் 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட கலியுகத்தில் தேவர்களாலும் அரசர்களாலும் வணங்கப்பட்டு நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும் அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
கோயில் இருக்கும் இடம் அன்றைய அரசாங்கத்தால் (சர்க்காரால்) வழங்கப்பட்ட இடம் என்பதால் சர்க்கார் பெரியபாளையம் என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் அக்ரஹார பெரியபாளையம் உள்ளது. கோயில் கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று கோயிலில் இருந்து வெளியேற வசதியுடன் இருந்துள்ளது. பின்னாளில் அவை மூடப்பட்டு விட்டது. வியக்க தகுந்த கோபுர அமைப்பு மற்றும் கல்வெட்டுகள் உள்ளதால் கடந்த 1956 ம் ஆண்டு இக்கோயிலை மத்திய அரசின் கலாச்சார அமைப்புடன் இணைந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கையகப்படுத்தி பராமரிப்பு செய்து வருகிறது. தொல்லியில்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீண்டும் கோவிலை புனரமைக்கும் வகையில் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதற்காக ஆய்வு செய்ய கோவில் கற்களை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும் இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் பூமியில் இறங்காமல் கட்டியபடியேயும் வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும் 9 கொங்கு பாண்டியர்களுக்கும் ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது. கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவள நாட்டைச் சேர்ந்த முகுந்தனூர் என்றும் சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். வீரராஜேந்திரன் காலத்து கல்வெட்டில் விழா பூஜை அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியர் காலத்து கல்வெட்டில் சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள் குளம் ஏரி வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியரின் இன்னொரு கல்வெட்டில் நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி சூரலூர் கிராம சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம் பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது. 15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய உடையார் தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் திருவிழா செலவுகளைச் சமாளிக்க 64 வணிகர் சங்கங்கள் பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. (பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வட்டெழுத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்). பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும் இங்குள்ள சில சிற்பங்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த சிவ லிங்கத்தை அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் வைப்புதலமாக சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.