காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். காசியில் இருக்கும் அதே கால பைரவர் சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள் காசு இல்லாவிட்டால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் அருளியிருக்கிறார். மூலவர் விடங்கீஸ்வரர். அம்பாள் விசாலாட்சியம்மன். தலவிருட்சம் இலந்தை மரம். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் இக்கோவில் உள்ளது. விடங்கி முனிவர் தவம் இருந்து கட்டிய கோவில் ஆகையால் விடங்கீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இங்குள்ள சுப்ரமண்யர் சிலையில் முருகனின் வாகனமான மயிலின் தலை வழக்கத்துக்கு மாறாக இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூரசம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது
இந்து வனம் அரச மரங்களும் இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லை என்று தவித்த முனிவர் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற விஸ்வநாதர் முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். கோபத்தின் உச்சிக்கே போன வடுக பைரவர் அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர் மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படும் முன் பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி ஆலயம் எழுப்பினார். எட்டு பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் கொன்ற இடம் என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் குண்டடம் என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள் இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது திரெளபதி மேல் அரக்கன் ஒருவன் ஆசை கொண்டதால் கோபப்பட்ட பீமன் அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான். இதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்கள் ரத்தக்காடு சாம்பல் காடு என்று உள்ளது. காலங்கள் கடந்தன. விடங்கி முனிவர் எழுப்பிய கோவில் வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பிற்கால மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய் கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர சோழ பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும். கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள் இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு. அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார். அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். ஐயா எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள் என்றார். அந்த வியாபாரி இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு என்று பொய் சொன்னார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர். மறுநாள் வியாபாரி மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு ஏதோ ஒரு சந்தேகம் வந்து பாண்டிய மன்னன் மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள் சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வியாபாரி கதறினான் பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார். அதையெல்லாம் நம்பும் நிலையில் மன்னன் இல்லை. பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள் என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. கொங்கு வடுகநாதா என்னை மன்னித்துவிடு என்று புலம்பி அழுதான். நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான். என்னுடைய பெண் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன் நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன் என்றான் மன்னன். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள் தந்தையே என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும் தந்தையை நோக்கி நடந்து வந்தான். பரவசமடைந்த பாண்டிய மன்னன் என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று துதித்தான். வடுக பைரவர் நானும் விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன் என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது பயறு பழையபடி மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு குண்டடம் சென்றான் மன்னன். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும் விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.